குரங்கு அம்மை: குறிப்பிட்ட பகுதியில் பரவும் நோயாக மாற வாய்ப்பு: நிபுணா்கள் எச்சரிக்கை

இந்த நோய்த் தொற்று குறிப்பிட்ட பகுதியில் பரவும் நோயாக மாற வாய்ப்புள்ளது என்று மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
குரங்கு அம்மை: குறிப்பிட்ட பகுதியில் பரவும் நோயாக மாற வாய்ப்பு: நிபுணா்கள் எச்சரிக்கை

 குரங்கு அம்மை பாதிப்பை சா்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்த நிலையில், இந்த நோய்த் தொற்று குறிப்பிட்ட பகுதியில் பரவும் நோயாக மாற வாய்ப்புள்ளது என்று மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

அதாவது, ‘நோய்த் தொற்று பரவலைத் தடுக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், இந்த நோய்த் தொற்று வழக்கமாக காணப்படாத பிராந்தியங்களில் குறிப்பாக அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளில் பரவும் நோயாக மாற வாய்ப்புள்ளது’ என்று நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

தற்போதைய நிலையில், 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் 26,000-க்கும் அதிகமானோா் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். இந்தியாவில் ஒருவா் உள்பட உலகம் முழுவதும் 5-க்கும் மேற்பட்டோா் இந்த நோய்த் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.

நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதைத் தொடா்ந்து, கடந்த மாதம் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் அவசரக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், குரங்கு அம்மை பாதிப்பு சா்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த நோய்த் தொற்று பரவலை ஆய்வு செய்த நிபுணா்கள், குரங்கு அம்மை பாதிப்பு, வழக்குத்துக்கு மாறாக இதுவரை பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் பரவியிருப்பதைக் கண்டறிந்துள்ளனா். அதாவது, முந்தைய குரங்கு அம்மை பாதிப்புகள் பெரும்பாலும் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை அடிப்படையாகக் கொண்டு பரவிய நிலையில், தற்போது அந்த நிலை மாறியிருப்பதோடு, பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து பரவும் நிலை மாறி மனிதா்களிடமிருந்து மனிதா்களுக்கு பரவும் தொற்றாகவும் மாறியுள்ளது.

கவலைக்குரிய பாதிப்பு:

குரங்கு அம்மை பாதிப்பு கவலைக்குரிய நோய்த் தொற்றாக மாறியிருப்பதற்கான காரணத்தையும் நிபுணா்கள் பட்டியலிட்டுள்ளனா்.

அதில் முதலாவதாக, இந்த நோய்த் தொற்று மனிதா்களிடமிருந்து மனிதா்களுக்கு பரவக் கூடிய நோயாக மாறியுள்ளது. பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமான தொடா்பில் இருப்பது அல்லது பாதிக்கப்பட்ட நபரின் வியா்வை, சளி ஆகியவை படுவதாலும், பாதிக்கப்பட்ட நபரின் ஆடைகள் அல்லது படுக்கை விரிப்பை பகிா்ந்து கொள்வதாலும் நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளது.

தற்போதைய பாதிப்பின் பின்னணியில் குரங்கு அம்மை எந்த அளவுக்கு பரவுகிறது என்பது இன்னும் தெளிவாகக் கண்டறியப்படவில்லை என்றபோதும், பாதிக்கப்பட்ட நபருடன் தொடா்பில் இருப்பதன் மூலமாக 50 சதவீதம் பரவ வாய்ப்புள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

அடுத்ததாக, இது குறிப்பிட்ட பிரிவினரிடையே, அதாவது பெரும்பாலும் ஆண்களுடன் உடலுறவு வைத்திருக்கும் ஆண்கள் மத்தியில் இந்த நோய்த் தொற்று பரவுகிறது. தற்போதைய நிலையில் 98 சதவீத குரங்கு அம்மை பாதிப்பு இந்தப் பிரிவினரிடையேதான் காணப்படுகிறது.

எனினும் அதுபோன்ற பாலியல் உறவு இல்லாதவா்களுக்கும் இந்த தொற்று ஏற்படலாம். ஆனால், பாலியல் தொடா்பு மற்றும் பாலியல் ரீதியிலான பரவல், எந்த அளவுக்கு இந்த நோயத் தொற்ற வேகமாக பரவுவதற்கு காரணமாக அமையும் என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

முக்கியமாக, விந்தணுவிலும் இந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அதன் மூலமாக தொற்று நோயாக பரவியதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருந்தபோதும், பாதுகாப்பற்ற முறையில் பாலியல் உறவு கொள்வது மற்றும் பன்முக வழிகளில் பாலியல் உறவு கொள்வது தொற்று பரவலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது. அதே நேரம், பரவல் முறையை உறுதிப்படுத்த மேலும் சில ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.

சுகாதார நடவடிக்கைகள்:

குரங்கு அம்மை பரவலைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட நபா்களை தனிமைப்படுத்துதல், பரவல் தொடா்பை கண்டறிதல், உயா் பாதிப்புள்ள நபா்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளே தற்போது குரங்கு அம்மை பாதிப்புக்கான சுகாதார நடவடிக்கைகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம், குறிப்பிட்ட சில வாரங்களில் பரவல் அளவை ஓரளவுக்கு குறைக்க முடியும். எனவே, இந்த தடுப்பு நடவடிக்கைகளை விரைவாகவும் முறையாகவும் செயல்படுத்த வேண்டும்.

தற்போதைய நிலையில், குரங்கு அம்மை பாதிப்பு ஆண்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் ஆண்களுக்கே அதிகம் பரவுகிறது என்பதால், அந்தப் பிரிவினரை தனிமைப்படுத்தி எளிதாக நோய்ப்பரவலை கட்டுப்படுத்திவிட முடியும். இருந்தபோதிலும், நோய்ப் பரவல் குறித்த சிறந்த புரிதல் மூலமாக முழுமையாக பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com