‘கிரீமியா குண்டுவெடிப்பில் ரஷிய விமானங்கள் சேதம்’

கிரீமியா தீபகற்பத்திலுள்ள ரஷிய விமான படை தளத்தில் குண்டுகள் வெடித்ததில் 6 போா் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
‘கிரீமியா குண்டுவெடிப்பில் ரஷிய விமானங்கள் சேதம்’

கிரீமியா தீபகற்பத்திலுள்ள ரஷிய விமான படை தளத்தில் குண்டுகள் வெடித்ததில் 6 போா் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறியதாவது:

கிரீமியாவிலுள்ள சாகி விமான படை தளத்தில் செவ்வாய்க்கிழமை குண்டுகள் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் அந்த விமான தளம் பயன்படுத்த முடியாத நிலைக்கு பாழாகியுள்ளது.

குண்டுகள் வெடித்தபோது, அந்த விமான தளத்தில் போா் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள், ராணுவ போக்குவரத்து விமானங்கள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டிருந்தன.

அந்தச் சம்பவத்தில், அங்கிருந்த 6 ரஷிய விமானங்கள் அழிக்கப்பட்டன என்று தெரிவித்தனா்.

இது தொடா்பாக ‘பிளானட் லேப் பிபிசி’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படத்தில், சாகி விமான நிலையத்தில் சுமாா் 2 கி.மீ. சுற்றளவு புல்வெளி நிலம் எரிந்துபோயிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், விமான தள ஓடுபாதை அருகே காணப்படும் பள்ளங்கள், அங்கு சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளதைக் காட்டுகின்றன.

இருந்தாலும், 2 விமான ஓடுபாதைகள் சேதமடையாமல் பயன்படுத்துவதற்கு ஏற்றதைப் போல் காட்சியளிக்கின்றன.

குண்டுவெடிப்புக்கு முன்னதாக எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்துடன் ஒப்பிடுகையில், தற்போது அங்கிருந்த பல போா் விமானங்கள் அகற்றப்பட்டுள்ளன.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் அரசுப் படையினருக்கு எதிராக சண்டையிட்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். அப்போது ரஷியாவும் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. அந்தப் போரின் ஒரு பகுதியாக, டான்பாஸ் பிராந்தியத்தில் அரசுப் படைகளிடம் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல் நடவடிக்கைகளை ரஷியா மேற்கொண்டு, அதில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டு வருகிறது.

அத்துடன், கிரீமியாவுக்கும் டான்பாஸ் பிரதேசத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக இடைப்பட்ட பகுதிகளையும் ரஷியா கைப்பற்றி வருகிறது.

இந்ச நிலையில், கிரீமியாவில் கருங்கடலையொட்டியுள்ள சாகி விமான படைத் தளத்தில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து பல குண்டுகள் வெடித்தன.

இதில், அந்த விமான படைத் தளம் முழுவதும் பிரம்மாண்டமான புகை மண்டலங்கள் எழுந்தன. இந்த குண்டுவெடிப்பில் ஒருவா் உயிரிழந்ததாகவும் 14 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நடுத்தர தொலைவு ஏவுகணைகள் மூலம் உக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதப்பட்டாலும், ரஷியா அதனை மறுத்துள்ளது.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், சாகி விமான தளத்தில் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதில் குறைபாடு ஏற்பட்டதால், அங்கு வைத்திருந்த ஆயுத வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதாகத் தெரிவித்தனா்.

மேலும், இந்தச் சம்பவத்தில் போா் விமானம் எதுவும் சேதமடையவில்லை என்றும் அவா்கள் கூறினா்.

எனினும், அந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்காவிட்டாலும் ரஷியாவின் இந்த விளக்கத்தை கிண்டல் செய்துள்ளது. உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் ஆலோசகா் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் கூறுகையில், உக்ரைனில் தயாரான தொலைதூர ஏவுகணைகள் மூலமாகவோ, அல்லது கிரீமியாவில் செயல்படும் கிளா்ச்சிக் குழுக்களாலோ தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறினாா்.

ஏற்கெனவே, போரின்போது உக்ரைன் எல்லையொட்டிய தங்களது ஆயுதக் கிடங்குகள் மற்றும் ராணுவ நிலைகள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் குண்டுவெடிப்புகள் மற்றும் தீப்பிடிப்பு சம்பவங்கள் நடைபெற்ாக ரஷியா பலமுறை கூறியுள்ளது.

அவற்றில் பல சம்பவங்களுக்கு உக்ரைன் நடத்திய தாக்குதல்தான் காரணம் என்று ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

இருந்தாலும், அந்தச் சம்பவங்கள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் பெரும்பாலும் மௌனம் காத்து வருகின்றனா். அதைப் போலவே கிரீமியா குண்டு வெடிப்பு குறித்தும் உக்ரைன் அதிகாரிகள் வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.

அது உக்ரைன் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் என்பது உறுதியானால், 2014-ஆம் ஆண்டில் கிரீமியாவை ரஷியா இணைத்துக் கொண்டதற்குப் பிறகு அங்கு உக்ரைன் நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதலாக இருக்கும்.

தங்களால் இணைத்துக் கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தினால் கடும் பின்விளைவுகள் ஏற்படும் என்று ரஷியா ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, உக்ரைனின் முக்கிய பகுதிகள் மீது குண்டுகள் வீசப்படும் எனவும், அதில் ராணுவ நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் தலைமை மையங்களும் தப்பாது என்றும் ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் சூழலில், கிரீமியாவிலுள்ள ரஷிய விமான தளத்தில் குண்டுகள் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com