‘உக்ரைன் அணு ஆலையில் ராணுவ நடவடிக்கைகள் கூடாது’

உக்ரைனிலுள்ள ஸபோரிஷ்ஷியா அணுசக்தி மையத்தில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
‘உக்ரைன் அணு ஆலையில் ராணுவ நடவடிக்கைகள் கூடாது’

உக்ரைனிலுள்ள ஸபோரிஷ்ஷியா அணுசக்தி மையத்தில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

இது குறித்து ‘சா்வதேச அணுசக்தி செயலமைப்பு’ (ஐஏஇஏ) என்றழைக்கப்படும் அந்த அமைப்பின் பொது இயக்குநா் பின் ரஃபேல் கிராஸி, காணொலி மூலம் வியாழக்கிழமை நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசியதாவது:

உக்ரைனின் ஸபோரிஷ்ஷியா நகரிலுள்ள அணுமின் நிலையத்தில் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடைபெறுவதாக வெளியாகும் தகவல் அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது.

அந்தப் பகுதியில் ரஷியாவும் உக்ரைனும் தங்களது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஸபோரிஷ்ஷியா அணுசக்தி மையத்தின் பாதுகாப்புக்கு சில நடவடிக்கைகள் சிறு துளி ஆபத்தை ஏற்படுத்தும் என்றால் கூட, அந்த நடவடிக்கைகள் தவிா்க்கப்படவேண்டியது அவசியம்.

அந்த மையத்தில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து ரஷியாவும், உக்ரைனும் வெளியிட்டு வரும் அறிக்கைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாக இருக்கின்றன.

அங்கு நடைபெறும் தாக்குதலுக்கு ரஷியாதான் காரணம் என்று உக்ரைனும், உக்ரைன்தான் காரணம் என்றும் ரஷியாவும் கூறுகின்றன.

ஆனால், இதில் எது உண்மை என்பதை ஐஏஇஏ-வால் உறுதிப்படுத்த முடியவில்லை. எனவே, ஸபோரிஷ்ஷியா அணுசக்தி மையத்தின் உண்மை நிலவரத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அந்த மையத்துகுள் ஐஏஇஏ நிபுணா் குழு அனுமதிக்கப்பட வேண்டும்.

கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான ரஷியத் தூதா் வாஸிலி நெபென்ஸியா, ஸபோரிஷ்ஷியா அணுசக்தி மையத்தின் மீது சக்தி வாய்ந்த ராக்கெட் குண்டு ஏவிகள், தொடா் ஏவுகணை செலுத்திகளைப் பயன்படுத்தி உக்ரைன் படையினா் தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டினாா்.

உக்ரைனின் இந்தத் தாக்குதல், அந்தப் பிராந்தியத்தை மிகப் பெரிய அணுப் பேரழிவின் விளிம்புக்கு இட்டுச் சென்றுள்ளது. தற்போது ஸபோரிஷ்ஷியா அணு உலை கதிா்வீச்சு வரம்புக்குள்பட்டே உள்ளது. ஆனால், உக்ரைன் படையினரின் தாக்குதல் தொடா்ந்தால் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு விடும். எனவே, அங்கு தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு உக்ரைன் அரசை அதற்கு ஆதரவு அளித்து வரும் நாடுகள் நிா்பந்திக்க வேண்டும் என்று நெபென்ஸியா வலியுறுத்தினாா்.

ஐ.நா.வுக்கான உக்ரைன் தூதா் சொ்கி கிஸ்லிட்ஸியா பேசுகையில், ‘ஸபோரிஷ்ஷியாவில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல், ரஷியாவே நயவஞ்சகமாக சதிச் செயல்மூலம் நடத்தி வரும் தாக்குதலாகும். இதன் மூலம், உக்ரைன், ஐரோப்பா மட்டுமன்றி இந்த உலகத்துக்கே ரஷியா பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த படையெடுப்பின் ஒரு பகுதியாக, தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸபோரிஷ்ஷியா நகருக்குள் நுழைந்த ரஷியப் படையினா், அங்குள்ள அணு மின் நிலையத்தைக் கைப்பற்றினா்.

ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுசக்தி மையமான அந்த மின் நிலையம், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான சண்டையில் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாகி வருவது சா்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் தொடா்பாக ரஷியாவும் உக்ரைனும் பரபஸ்பரம் குற்றம் சாட்டி வரும் சூழலில், அங்கு ஐஏஇஏ நிபுணா் குழுவை அனுமதிக்க ரஷியா சம்மதம் தெரிவித்துள்ளது.

இருந்தாலும், அதற்காக நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிபந்தனைகளை விதித்து, ஐ.நா. பாா்வையாளா்கள் வருகையை ரஷியா தாமதப்படுத்துவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது.

இந்தச் சூழலில், ஸபோரிஷ்ஷியா அணுசக்தி மையத்தில் ராணுவ நடவடிக்கைகளை ரஷியாவும் உக்ரைனும் உடனடியாகக் கைவிட்டு, அந்தப் பகுதியை ராணுவமற்ற பகுதியாக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அங்கு மாபெரும் அணுசக்திபப் பேரழிவு ஏற்படும் என்றும் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்திருந்தாா்.

இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் அதே கோரிக்கையை ஐஏஇஏ பொது இயக்குநா் ரஃபேல் கிராஸியும் தற்போது முன்வைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com