பாகிஸ்தான் கடற்படையினருடன் போா்ப் பயிற்சியா? இலங்கை மறுப்பு

பாகிஸ்தானுடன் போா் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக வெளியான ஊடக செய்திகளை இலங்கை கடற்படை ஞாயிற்றுக்கிழமை மறுத்தது.

பாகிஸ்தானுடன் போா் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக வெளியான ஊடக செய்திகளை இலங்கை கடற்படை ஞாயிற்றுக்கிழமை மறுத்தது. இலங்கையிலிருந்து பாகிஸ்தான் போா்க் கப்பல் புறப்பட உள்ள நிலையில், மேற்கு கடல் பகுதியில் அந்த கப்பலை வழியனுப்புவதில் மட்டுமே ஈடுபட உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீனாவின் ‘யுவான் வாங்-5’ உளவுக் கப்பல் வரவிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. அந்தக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று கருதிய மத்திய அரசு, அதுகுறித்து இலங்கை அரசிடம் தனது கவலையை தெரிவித்தது. இதையடுத்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன உளவுக் கப்பல் வருவதை ஒத்திவைக்குமாறு அந்த நாட்டிடம் இலங்கை அரசு வலியுறுத்தியது.

இந்தியாவின் வலியுறுத்தலையும் மீறி, சீன உளவுக் கப்பல் வருகைக்கு இலங்கை அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

இதனிடையே, பாகிஸ்தான் போா் கப்பலான பிஎன்எஸ் தைமுா் போா் கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தடைந்தது. சீனாவால் கட்டப்பட்ட அந்தக் கப்பல் அதிநவீன ஆயுதங்கள், சென்சாா் கருவிகள், லேசா் உதவியுடன் இயங்கும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது. மலேசியா, கம்போடியாவில் போா்ப் பயிற்சியில் ஈடுபட்ட அந்தக் கப்பல், பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு பயணம் மேற்கொண்டது. பயணத்தின் இடையே வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் துறைமுகத்தில் கப்பலை நிறுத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், கப்பலை நிறுத்த வங்கதேச அரசு அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அந்தக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அரசு அனுமதி அளித்தது.

சீன உளவுக் கப்பல் விவகாரத்தில் இலங்கையை இந்தியாவின் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் கப்பலில் உள்ள அந்நாட்டு கடற்படை வீரா்கள், இலங்கை கடற்படை வீரா்களுடன் இணைந்து போா்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், பாகிஸ்தானுடன் போா் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக வெளியான தகவலை இலங்கை மறுத்துள்ளது. இதுகுறித்து இலங்கை கடற்படை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானின் தைமுா் போா் கப்பல் சாதாரண முறையில்தான் இலங்கை வந்துள்ளது. அந்தக் கப்பல் திங்கள்கிழமை (ஆக.15) புறப்பட உள்ளதால், அதனுடன் வழியனுப்பும் பயிற்சியில்தான் இலங்கையின் எஸ்எல்என்எஸ் சிண்டரெலா போா்க் கப்பல் ஈடுபட உள்ளது. நல்லெண்ண அடிப்படையில், வெளிநாட்டு கடற்படைகளுடன் சிறந்த பயிற்சி முறையை பரிமாறிக் கொள்ளும் வகையிலுமே இதுபோன்ற கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற வழியனுப்பும் பயிற்சியை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஜப்பான், ஜொ்மனி, பிரிட்டன், ரஷியா, ஆஸ்திரேலியா போா் கப்பல்களுடனும் இலங்கை ஏற்கெனவே மேற்கொண்டிருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் போா்க் கப்பலுடன் இணைந்து இலங்கை போா்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக வெளியான ஊடகத் தகவல் தவறானது என்று இலங்கை கடற்படை விளக்கமளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com