பாகிஸ்தான் கனமழை: பலி எண்ணிகை 1000-ஐ தாண்டியது

பாகிஸ்தானில் வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்து வரும் பருவ மழைக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஆக உயர்ந்துள்ளது
பாகிஸ்தான் கனமழை: பலி எண்ணிகை 1000-ஐ தாண்டியது


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்து வரும் பருவ மழைக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இது நாட்டின் "ஒரு தீவிர காலநிலை பேரழிவு" என்று தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவ மழை, நாடு முழுவதும் வழக்கத்தைவிட மிக அதிகமாக பெய்தது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் மீட்புக் குழுவினா் திணறும் அளவுக்கு மழையும் வெள்ளப் பெருக்கும் மிகத் தீவிரமாக இருந்தது.

தொடா்ந்து பெய்து வரும் பருவ மழைக்கு நாடு முழுவதும் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனா். ஏராளமானவா்கள் காயமடைந்துள்ளனா். ஆயிரக்கணக்கானவா்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேரிடா் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட முன்னதாக தொடங்கியதில் இருந்து இறப்பு எண்ணிக்கையை அறிவித்தது.

இந்நிலையில், அந்நாட்டு தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, கைபர் மற்றும் தெற்கு சிந்து மாகாணங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 119 போ் இறந்துள்ளனர். இதுவரையில், 1,033 போ் உயிரிழந்துள்ளனா். 1,527 போ் காயமடைந்துள்ளனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாறு காணாத மழைக்காலம் நாட்டின் நான்கு மாகாணங்களையும் பாதித்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 3,451 கி.மீ. சாலைகள், 147 பாலங்கள், 170 கடைகள், 9 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 3,00,000 குடியிருப்புகள் காணவில்லை, ஏராளமான சாலைகள் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையில், பாகிஸ்தானின் வடக்கில் உள்ள பள்ளத்தாக்கில் சிக்கியிருந்த 22 சுற்றுலாப் பயணிகளை விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com