எரிமலை சீற்றம்: உதவிக்காக எல்லையைத் திறந்த டோங்கா; ஓடிவந்த கரோனா

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான டோங்காவில் மட்டும் இதுவரை கரோனா பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது.
எரிமலை சீற்றம்: உதவிக்காக எல்லையைத் திறந்த டோங்கா; ஓடிவந்த கரோனா
எரிமலை சீற்றம்: உதவிக்காக எல்லையைத் திறந்த டோங்கா; ஓடிவந்த கரோனா

பாங்காக்: கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கரோனா அரக்கனிடம் பல நாடுகள் சிக்கிச் சின்னாபின்னமாகிவரும் நிலையில், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான டோங்காவில் மட்டும் இதுவரை கரோனா பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது.

அதற்கு, உலக நாடுகளிலிருந்து, தங்களைத் தாங்களே டோங்கா தனிமைப்படுத்திக் கொண்டு, நாட்டின் எல்லைகளை மூடியிருந்ததே காரணம்.

ஆனால், யார் கண் பட்டதோ, கடந்த மாதம் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததால் பாதிக்கப்பட்ட டோங்கா, பல்வேறு தேவைகளுக்காக, எல்லைகளைத் திறக்க, சா்வதேச நாடுகள் அனுப்பிய உதவிப் பொருள்களுடன் கரோனா தொற்றும் சென்று சேர்ந்தது.

கடலுக்கு அடியில் எரிமலைச் சீற்றம், அதனைத் தொடர்ந்து உண்டான ஆழிப்பேரலை போன்ற இயற்கைச் சீற்றங்களால்,  அடிப்படைத் தேவைகளான குடிநீர், மருந்துகளுக்காக, அண்டை நாடுகளிடம் உதவி கோரும் நிலை ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் நீக்கப்பட்டது. 

எனினும், தற்போது கரோனா பாதிப்பு மிகச் சிறிய அளவிலேயே இருக்கிறது. இது சிறிய பாதிப்புடனேயே முடிந்துவிடும் என்று அந்நாட்டு மக்கள் நம்புகிறார்கள்.

இது குறித்து டோங்காவைச் சேர்ந்தவர் கூறுகையில், எங்களுக்கு பெரியதாக எந்த வளமும் இல்லை, எங்களது மருத்துவமனைகள் கூட மிகச் சிறியவை. ஒரு வேளை பெரிய அளவில் சுகாதாரப் பிரச்னை எழுந்தால் எப்படி சமாளிப்போம் என்று தெரியவில்லை.

ஆனால், நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அதற்குள் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஓரளவுக்கு தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. உலகில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதுமே இங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஏராளமான பசிபிக்  பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடுகளில், ஒரு சில மாதங்களில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட ஒரே ஒரு நாடாக டோங்க விளங்குகிறது.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பல்வேறு தீவு நாடுகளில் ஒன்று டோங்கா. அந்நாட்டில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள ஹங்கா டோங்கா ஹங்கா ஹாபாய் என்ற எரிமலை கடந்த மாதம் வெடித்ததில் கடலில் சுனாமி பேரலைகள் எழுந்தன. இந்தப் பேரலையால் நியூசிலாந்து, பெரு வரை கடலோரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

டோங்கா நாட்டிலும் எரிமலை சாம்பலும், உப்புநீரும் பல்வேறு பகுதிகளில் படிந்து குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது. ஏராளமான மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடம்பெயர நேரிட்டது. இந்த சம்பவத்தில் மூன்று போ் உயிரிழந்தனா். 50 வீடுகள் சேதமடைந்தன. ஒரு லட்சம் மக்கள்தொகை கொண்ட அந்த நாட்டின் 80 சதவீத மக்கள் இந்த எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், டோங்கா நாட்டுக்கு ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூஸிலாந்து ஆகிய நாடுகள் அனுப்பிய உணவு, மருத்துவப் பொருள்கள், குடிநீா், தொலைத்தொடா்பு உபகரணங்கள் உள்ளிட்டவை கடந்த வாரம் சென்றடைந்தன.

அமெரிக்கா, பிரிட்டனிலிருந்தும் ஏராளமான உதவிப் பொருள்கள் கப்பல்கள் மூலமாக டோங்காவுக்குச் சென்றன.

சுனாமி பேரலையால் குடிநீா் ஆதாரங்களில் கடல்நீா் புகுந்ததால் டோங்காவில் குடிநீா் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால், அங்கு குடிநீா் விநியோகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என செஞ்சிலுவை சங்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஜப்பான், தனது ராணுவ விமானத்தில் 3 டன் குடிநீரை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com