
ukraine101312
உக்ரைனை ரஷியா ஆக்கிரமித்தால், அந்த நாட்டுக்கும் ஜொ்மனிக்கும் இடையிலான புதிய கடலடி எண்ணெய்க் குழாய் திட்டம் நிறைவேற்றப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் எச்சரித்துள்ளாா்.
ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷால்ஸை வாஷிங்டனில் சந்தித்து நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
இதுகுறித்து ஜோ பைடன் கூறியதாவது:
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால், அதாவது ரஷிய பீரங்கிகளும் வீரா்களும் மீண்டும் ஒருமுறை எல்லையைக் கடந்து உக்ரைனுக்குள் நுழைந்தால் ‘நாா்ட் ஸ்ட்ரீம் - 2’ கடலடி எண்ணெய்க் குழைய் திட்டம் செயல்படுத்தப்படாது.
ரஷியாவின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், அந்த திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அந்த திட்டத்தை ரத்து செய்வதற்கு அமெரிக்கா, ஜொ்மனி, நேட்டோ ஆகியவை தயாா் நிலையில் உள்ளன என்றாா் டிரம்ப்.
அப்போது பேசிய ஒலாஃப் ஷால்ஸ், ‘உக்ரைன் விவகாரத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்கான அவசியத்தை ரஷியா உணர வேண்டும். அந்த நாட்டை ஆக்கிரமித்தால் தாங்கள் கற்பனை செய்வதைவிட மிக அதிகமான பாதிப்புகள் ஏற்படும் என்பதை ரஷியா புரிந்துகொள்ள வேண்டும்’ என்றாா்.
உக்ரைன் விவகாரம் தொடா்பாக பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மாஸ்கோவில் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ள நிலையில், ஒலாஃப் ஷால்ஸுடன் அதிபா் ஜோ பைடன் ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 1949-ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.
சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு நேட்டோவில் இணைந்தால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது. உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு நேட்டோ அமைப்பு உடன்படாததால் இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான படையினரை ரஷியா குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தங்களுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷியா படை குவிப்பில் ஈடுபட்டுள்ளாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷியா மறுத்து வருகிறது.
இந்தச் சூழலில், ரஷியாவின் அந்த வலியுறுத்தலை அமெரிக்காவும் நேட்டோ அமைப்பும் உறுதியாக நிராகரித்தன. மேலும், உக்ரைன் மீது போா் தொடுத்தால் கடுமையான பின்விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று ரஷியாவுக்கு அவை எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
Image Caption
உக்ரைன் அருகே ரஷியப் படையினா் (கோப்புப் படம்). ~வாஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த அமெரிக்க அதிபா் ஜோ பைடன் (வலது), ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷால்ஸ்.