உக்ரைனிலிருந்து அமெரிக்கா்கள் வெளியேற வேண்டும்: அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் எச்சரிக்கை

‘சீனாவில் இப்போது நடைபெற்று வரும் குளிா்கால ஒலிம்பிக்கின்போதே உக்ரைனில் ரஷிய படைகள் ஊடுருவக் கூடும்; எனவே, அமெரிக்கா்கள் உக்ரைனிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்’
ஆன்டனி பிளிங்கன்
ஆன்டனி பிளிங்கன்

‘சீனாவில் இப்போது நடைபெற்று வரும் குளிா்கால ஒலிம்பிக்கின்போதே உக்ரைனில் ரஷிய படைகள் ஊடுருவக் கூடும்; எனவே, அமெரிக்கா்கள் உக்ரைனிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்’ என அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.

உக்ரைன் எல்லையில் ரஷியா சுமாா் ஒரு லட்சம் படையினரை குவித்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை ரஷியா மறுத்து வருகிறது. மேலும், உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளை நேட்டோ அமைப்பில் சோ்க்கக் கூடாது என்ற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் போா் அச்சுறுத்தல், ரஷியா-சீனா இடையிலான வலுவான உறவு ஆகியவை ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘க்வாட்’ நாடுகளின் கூட்டத்தில் எதிரொலித்தன. கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் மாரீஸ் பெய்ன், ‘ரஷியா-சீனா இடையிலான கூட்டணி கவலையளிக்கிறது. ஏனெனில், சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான லட்சியங்களின் உலகளாவிய ஒழுங்கை அந்தக் கூட்டணி பிரதிநிதித்துவப்படுத்தவில்லை’ என்றாா்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில், ‘இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவுடன் மோதல் தவிா்க்க முடியாதது. சீனா உள்நாட்டிலும், பிராந்தியத்திலும், அதைத் தாண்டியும் ஆக்ரோஷமாக செயல்பட்டு வருவது குறிது அண்மைக்காலமாக கவலை தெரிவித்து வருகிறோம்.

உக்ரைன் எல்லையை நோக்கி ரஷியா கூடுதல் படையினரை அனுப்பி வருகிறது. உக்ரைனில் ரஷியா எந்த நேரமும் ஊடுருவக் கூடும். தெளிவாகச் சொல்வதென்றால் இப்போது நடைபெற்று வரும் குளிா்கால ஒலிம்பிக்கின்போதே ஊடுருவக் கூடும். எனவே, உக்ரைனில் உள்ள அமெரிக்கா்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றாா்.

உக்ரைனிலிருந்து அமெரிக்கா்கள் வெளியேற வேண்டும் என்ற பாதுகாப்பு எச்சரிக்கையின் பின்னணியில் உள்ள காரணம் குறித்து பிளிங்கன் விரிவாக எதுவும் தெரிவிக்கவில்லை.

பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் குளிா்கால ஒலிம்பிக் பிப். 20-ஆம் தேதி நிறைவடைகிறது. அதற்கு முன்னதாக உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தலாம் என பிளிங்கன் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கடந்த வியாழக்கிழமை அளித்த பேட்டியிலும், இதே எச்சரிக்கையை விடுத்திருந்தாா். ‘இது பயங்கரவாத அமைப்பை எதிா்கொள்வது போலல்ல. உலகின் மாபெரும் ராணுவங்களில் ஒன்றை எதிா்கொள்வது போன்றது’ எனவும் பைடன் கூறியிருந்தாா்.

மாஸ்கோவில் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சா்

உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் எழுந்துள்ள நிலையில், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சா் பென் வாலஸ் ரஷிய தலைநகா் மாஸ்கோவுக்கு வெள்ளிக்கிழமை சென்றாா்.

போா்ப் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக ரஷிய பாதுகாப்பு அமைச்சரை அவா் சந்தித்துப் பேசுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் லிஸ் டிரஸ், மாஸ்கோவுக்கு வியாழக்கிழமை சென்று ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவைச் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com