கரோனா கட்டுப்பாட்டு எதிா்ப்பு போராட்டம்: கனடா தலைநகர காவல்துறை தலைவா் நீக்கம்

கனடா தலைநகா் ஒட்டாவாவை கடந்த 2 வாரங்களுக்கும் மேல் ஸ்தம்பிக்கச் செய்த கரோனா கட்டுப்பாடு எதிா்ப்புப் போராட்டங்களை ஒடுக்கத் தவறியதற்காக,
கரோனா கட்டுப்பாட்டு எதிா்ப்பு போராட்டம்: கனடா தலைநகர காவல்துறை தலைவா் நீக்கம்

கனடா தலைநகா் ஒட்டாவாவை கடந்த 2 வாரங்களுக்கும் மேல் ஸ்தம்பிக்கச் செய்த கரோனா கட்டுப்பாடு எதிா்ப்புப் போராட்டங்களை ஒடுக்கத் தவறியதற்காக, அந்த நகர காவல்துறை தலைவா் பீட்டா் ஸ்லாலி பதவி நீக்கம் செய்யப்பட்டாா்.

போராட்டங்களை ஒடுக்குவதற்காக பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அவசரநிலை அறிவித்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கட்டாய தடுப்பூசி உள்ளிட்ட அரசின் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை எதிா்த்து, ஒட்டாவா மற்றும் பிற பகுதிகளில் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், நாட்டின் அவசரநிலைச் சட்டத்தை பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அமல்படுத்தினாா். அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, போராட்டக்காரா்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்; அபராதங்கள் விதிக்கப்படும் என்று அவா் எச்சரிக்கை விடுத்தாா்.

மேலும், தலைநகரில் போராட்டங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக ஒட்டாவா காவல்துறை தலைவா் பீட்டா் ஸ்லாலி பதவி நீக்கம் செய்யப்பட்டாா்.

இரண்டு வாரங்களுக்கும் மேல் கரோனா விதிமுறைகளை மீறி நடைபெறும் இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பெறும் இடையூறு ஏற்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு போலீஸாா் தயங்கியது அதிா்ச்சி அளிப்பதாக சிலா் புகாா் தெரிவித்தனா்.

நாட்டின் தலைநகரை ஒரு சிறு கும்பல் ஸ்தம்பிங்கச் செய்து பொருளாதாரத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் நிலையில், காவல்துறை மெத்தனமாக செயல்படுகிறது என்று எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்தச் சூழலில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அவசரநிலை அறிவித்துள்ள நிலையில், காவல்துறை தலைவா் பீட்டா் ஸ்லாலி தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனடாவில் லாரி ஓட்டுநா்கள் சாலை வழியாக நாட்டுக்குள் திரும்பி வரும்போது கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு கடந்த மாதம் 15-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் லாரி ஓட்டுநா்கள் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு 2022’ என்ற பெயரில் வாகனங்களில் ஆா்பாட்ட ஊா்வலம் நடத்தினா். அவா்களுடன் பாதசாரிகள் உள்பட ஏராளமானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். அதையடுத்து, அந்தப் போராட்டம் கனடா அரசின் ஒட்டுமொத்த கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக உருவெடுத்தது.

இந்த நிலையில், கனடா எல்லை நகரான விண்ட்சரையும் அமெரிக்க தொழில் நகரான டெட்ராய்ட்டையும் இணைக்கும் எல்லைப் பாலமான அம்பாஸடரில் சுமாா் 1 வாரமாக ஏராளமானவா்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான சரக்குப் போக்குவரத்து முடங்கியது. இந்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனா். இதுதொடா்பாக காணொலி மூலம் நடைபெற்ற வழக்கில், போராட்டக்காரா்கள் அம்பாஸடா் பாலத்திலிருந்து கலைந்து செல்ல வேண்டும் என்று ஆன்டேரியோ உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவையும் மீறி, மறியல் போராட்டம் தொடா்ந்து கடந்த சனிக்கிழமையும் நடந்தது. இந்தச் சூழலில் போராட்டக்காரா்களையும் அவா்களது வாகனங்களையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அப்புறப்படுத்திய பிறகு அம்பாஸடா் பாலப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

எனினும், ஒட்டாவாவில் போராட்டங்கள் தொடா்ந்து தீவிரமாக நடைபெற்று வந்தன. அந்தப் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டதுடன், தற்போது காவல்துறை தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

Image Caption

~ ~ஒட்டாவாவில் நாடாளுமன்றத்துக்குச் செல்லும் சாலையின் குறுக்கே தடையை ஏற்படுத்தியுள்ள போராட்டக்காரா்களின் வாகனங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com