
ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக பதவி வகிப்பவர் இந்திய வம்சாவளி பாரக் அகர்வால். இரண்டாவது குழந்தை பிறந்திருப்பதால், சில வாரங்களுக்கு விடுப்பு எடுக்கவுள்ளதாக அவர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆண்கள், மகப்பேறு விடுப்பு எடுப்பதை ஊக்குவிக்காத சமூகமாக உலகம் உள்ளது.
இந்த நிலையில், இம்மாதிரியான உயர் மட்டத்தில் பதவி வகிப்பவர்கள் மகப்பேறு விடுப்பு எடுப்பது முன்மாதிரியான செயல் என பலர் அவருக்கு பாராட்டு தெரிவித்துவருகின்றனர். இருப்பினும், பழமைவாதத்திலிருந்து விடுபட அவரின் செயல் போதுமானதாக இல்லை என சிலர் கருதுகின்றனர். அமெரிக்க நிறுவனங்களில் சூழல் எப்படி வேகமாக மாறியுள்ளது என்பது இதற்கு சமிக்ஞையாக இருக்கலாம். ஆனால், ட்விட்டர் நிறுவனம் அளித்துள்ள 20 வார விடுப்பை அவர் ஏன் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு மத்தியில், தேவையான விடுப்பை எடுக்கும்படி ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன் அகர்வாலை கேட்டு கொண்டுள்ளார். இம்மாதிரியாக செய்வதன் மூலம் நாமும் மகப்பேரு விடுப்பு தேவையான காலத்திற்கு எடுக்கலாம் என்பதை ஊழியர்களுக்கு உணர்த்த முடியும்.
மகப்பேறு விடுப்புக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அலெக்சிஸ் ஓஹானியன், "நீங்கள் மகப்பேறு விடுப்பைப் இரண்டாக பிரிக்கலாம், அதாவது வீட்டில் உள்ள அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த சில வாரங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், பின்னர் மீதமுள்ள விடுமுறையைப் பயன்படுத்த ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.
அவருக்கு சொந்தமான இனிஷியலைஸ்ட் என்ற நிறுவனம் நான்கு மாதங்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கிறது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் கேரி டான், "இனிஷியலைஸ்ட் நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் மகப்பேறு விடுமுறை கிடைக்கும்போது அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவர்களுக்கு உணர்த்துவதற்காக எனக்கு அளிக்கப்பட்ட நான்கு மாத மகப்பேறு விடுப்பை எடுத்து கொண்டேன்" என்றார்.
இதையும் படிக்க | சிங்கப்பூர் தூதருக்கு மத்திய அரசு சம்மன்
ட்விட்டர் நிறுவனத்தின் தொழில்நுட்பம் தலைவராக இருந்த அகர்வாலுக்கு கடந்த நவம்பர் தலைமை செயல் அலுவலர் பதவி வழங்கப்பட்டது. அகர்வாலின் மகப்பேறு விடுப்பு குறித்து ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் லாரா யாகர்மேன் கூறுகையில், "அவரது விடுப்பின் போது, அகர்வால் நிர்வாக குழுவுடன் இணைந்திருக்க திட்டமிட்டுள்ளார்.
அதுவே அவருக்கும் அவரது மனைவிக்கும் நிறுவனத்திற்கும் நல்லது. ட்விட்டரில், மகப்பேறு விடுப்பு எடுக்கும் பணியாளர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். முழுமையாக ஆதரிக்கிறோம்" என்றார்.
கலிஃபோர்னியா சட்டத்தின்படி தகுதியுள்ள தொழிலாளர்களுக்கு 12 வாரங்கள் வரை ஊதியம் இல்லாத மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். பிற மாகாணங்களில், குழந்தை பிறக்கும் பட்சத்தில் சில ஊழியர்களுக்கு ஆறு வாரங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பை உறுதி செய்கின்றன.