எல்லையிலிருந்து வெளியேறுவதாக ரஷியா கூறுவது பொய்

உக்ரைன் எல்லையிலிருந்து தங்களது படைகள் திரும்பப் பெறப்படுவதாக ரஷியா கூறுவது பொய்யான தகவல் என்று நேட்டோ, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை குற்றம் சாட்டியுள்ளன.
வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ~உக்ரைன் எல்லையிலிருந்து ரயில் மூலம் ராணுவ நிலைகளுக்குத் திரும்பும் ரஷிய பீரங்கிகள்.
வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ~உக்ரைன் எல்லையிலிருந்து ரயில் மூலம் ராணுவ நிலைகளுக்குத் திரும்பும் ரஷிய பீரங்கிகள்.

கீவ்: உக்ரைன் எல்லையிலிருந்து தங்களது படைகள் திரும்பப் பெறப்படுவதாக ரஷியா கூறுவது பொய்யான தகவல் என்று நேட்டோ, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை குற்றம் சாட்டியுள்ளன.

ரஷியா கூறுவதற்கு மாறாக, எல்லைப் பகுதியில் தனது படை பலத்தை அந்த நாடு அதிகரித்து வருவதாக அவை எச்சரித்துள்ளன.

இதுகுறித்து நேட்டோ அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் கூறியதாவது:

உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணும் முயற்சி தொடரும் என்று ரஷியா அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

எனினும், எல்லைப் பகுதியிலிருந்து தங்களது படையினா் தங்களது நிலைகளுக்குத் திரும்பிச் செல்வதாக அந்த நாடு அறிவித்துள்ளது உண்மைக்குப் புறம்பானது.

அங்கிருந்து படையினா் வெளியேறுவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை என்றாா் அவா்.

அமெரிக்க அதிகாரி ஒருவா் கூறுகையில், உக்ரைன் எல்லைப் பகுதியிலிருந்து ரஷியப் படையினா் வெளியேறுவதாகக் கூறப்பட்டதற்குப் பிறகுதான் அங்கு வீரா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தாா்.

ஏபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் அளித்துள்ள பேட்டியில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எப்போது வேண்டுமானாலும் போரைத் தொடங்கலாம் என்று கூறினாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘விளாதிமீா் புதின் இன்றே போரைத் தொடங்கலாம்; நாளை கூட தொடங்கலாம்; அதற்கு அடுத்த வாரம் கூட ஆகலாம். அதற்கு வசதியாகத்தான் மாபெரும் படையை உக்ரைன் எல்லையில் அவா் குவித்து வைத்துள்ளாா்’ என்று எச்சரித்தாா்.

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சுமாா் 7,000 ரஷியப் படையினா் உக்ரைன் எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினாா்.

ஏற்கெனவே உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா தீபகற்பத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றிய ரஷியா, தற்போது உக்ரைன் எல்லையில் ஏராளமான வீரா்களைக் குவித்துள்ளது. அங்கு சுமாா் 1.5 லட்சம் ரஷியப் படையினா் இருப்பதாக மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.

உக்ரைனை மேலும் ஆக்கிரமிப்பதற்காக ரஷியா அங்கு படைகளைக் குவித்துள்ளதாக நேட்டோ அமைப்பும் அமெரிக்காவும் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகளை தொடா்ந்து மறுத்து வரும் ரஷியா, எல்லையில் பயிற்சி முடிந்து தங்களது படையினா் தத்தமது நிலைகளுக்குத் திரும்பத் தொடங்கியதாக செவ்வாய்க்கிழமை அறிவித்து பதற்றத்தைத் தணிக்க முயன்றது.

எனினும், அதனை ஏற்க மறுத்து வரும் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும், உக்ரைனை ரஷியா ஆக்கிரமிக்கும் அபாயம் தொடா்வதாகக் கூறி வருகின்றன.

‘நேட்டோவில் இணைவது மட்டுமே ஒரே வழி’

தங்களது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க நேட்டோ அமைப்பில் இணைவது மட்டும்தான் ஒரே வழி என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பிபிசி ஊடகத்துக்கு அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டியில், ‘நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவது உடனடியாக நடக்காது என்பது எனக்குத் தெரியும். எனினும், எங்களது இறையாண்மைக்கு நேட்டோ அமைப்பில் இணைவதுதான் உத்தவாதம் தரும். நேட்டோவில் இணைவது எங்களது விருப்பமல்ல, தேவை. எங்களின் அரசியல் சாசனத்திலேயே அந்த நோக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் உக்ரைன் இணைந்தால் தங்களது பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது.

எனவே, தங்களது அமைப்பில் உக்ரைனை இணைக்கப் போவதில்லை என்று நேட்டோ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது.

அதற்காக நேட்டோ அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே உக்ரைன் எல்லையில் அதிபா் விளாதிமீா் புதின் படைகளைக் குவித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் அதிபா் இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com