30 'பிரிடேட்டர் ட்ரோன்'கள் வாங்கும் ஒப்பந்தம்: இறுதிக் கட்டத்தில் இந்திய-அமெரிக்க பேச்சுவார்த்தை

அமெரிக்காவிடமிருந்து 3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 22,500 கோடி) மதிப்பில் பன்முகத் தாக்குதலுக்கு பயன்படக் கூடிய 30-எம்கியூ9பி பிரிடேட்டர் ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) இந்தியா வாங்குவதற்கான
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்காவிடமிருந்து 3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 22,500 கோடி) மதிப்பில் பன்முகத் தாக்குதலுக்கு பயன்படக் கூடிய 30-எம்கியூ9பி பிரிடேட்டர் ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு அட்லாண்டிக் பாதுகாப்பு ஒத்துழைப்பு (நேட்டோ) கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத ஒரு நாட்டுக்கு இந்த ட்ரோன்களை வழங்க அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த மிகப் பெரிய பாதுகாப்புத் துறை சார்ந்த ஒப்பந்தத்துக்கான முன்மொழிவு, கடந்த 2017-ஆம்ஆண்டு முந்தைய அதிபர் டிரம்ப் ஆட்சி காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது அறிவிக்கப்பட்டதாகும். 
அதன் பிறகு, இரு நாடுகளிடையே நடத்தப்பட்ட தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியாவின் ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை என முப்படைகளுக்கும் தலா 10 ட்ரோன்கள் வீதம் 30 பிரிடேட்டர் ட்ரோன்களை இந்தியாவுக்கு விற்க முதல்கட்ட அளவில் உடன்பாடு எட்டப்பட்டது. இந்த உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் மற்றும் சீனா என இரு எல்லை தொடர்பான போர் வந்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் எல்லையில் ராணுவ மற்றும் உள் கட்டமைப்புகளை இந்தியா பலப்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில், பிரிடேட்டர் ட்ரோன்களுக்கான உடன்பாடு இறுதி கட்டத்தை எட்டியிருப்பது இந்தியாவுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறுகையில், "நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத ஒரு நாட்டுக்கு இந்த ட்ரோன்களை வழங்க அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இரு நாட்டு சட்ட நடைமுறைகள் காரணமாகவே, இந்த ஒப்பந்த நடைமுறைகள் 6 ஆண்டுகள் வரை தாமதமாகின. மேலும், முன்னோட்டமாக, அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 2 பிரிடேட்டர் ட்ரோன்களை இந்தியா குத்தகைக்கு எடுத்து, சீன, பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளை கண்காணிக்கும் பணியில் இந்தியா பயன்படுத்தியதோடு, இந்த ட்ரோன்களின் பயன்பாடு குறித்து மிகுந்த வரவேற்பை இந்தியா தெரிவித்திருக்கிறது" என்றார்.
மற்றொரு அரசு அதிகாரி கூறுகையில், "இந்த உடன்பாடு தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு கொள்முதல் வாரியம் கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்து, உடன்பாட்டை இறுதி செய்துள்ளது. இதில், கொள்முதலுக்கான கோரிக்கைக் கடிதத்தைப் பெறுவதுதான் அடுத்தகட்டமாகும்" என்றார்.
பயன் என்ன?: அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த பிரிடேட்டர் ட்ரோன்கள் மணிக்கு 482 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து 27 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டது. மேலும், வானில் 50,000 அடி உயரம் வரை பறக்கக் கூடியது. 
அதோடு, 215 கிலோ எடையை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. கண்காணிப்பு, உளவு பார்த்தல், உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் எதிரி இலக்குகளை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இந்த ட்ரோன்களைப் பயன்படுத்த முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com