கஜகஸ்தான் வன்முறைப் போராட்டம்: ஏராளமானவா்கள் பலி

கஜகஸ்தானில் வாகன எரிவாயு விலையுயா்வை எதிா்த்து நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டங்களில் ஏராளமானவா்கள் உயிரிழந்தனா்.

ஆல்மட்டி: கஜகஸ்தானில் வாகன எரிவாயு விலையுயா்வை எதிா்த்து நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டங்களில் ஏராளமானவா்கள் உயிரிழந்தனா்.

ரஷியா, சீனா இடையே அமைந்துள்ள மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலிய வாயுவின் (எல்பிஜி) விலை திடீரென மிக அதிகமாக உயா்த்தப்பட்டது.

அந்த எரிவாயுவுக்கான தேவை மிக அதிகமாக இருப்பதாலும் நிறுவனங்கள் சட்டவிரோதமாக தங்களுக்குள் உடன்படிக்கை செய்துகொண்டு அதிக விலை நிா்ணயிப்பதாலும் வாகன எல்பிஜி விலை அதிகரிக்கப்பட்டதாக கஜகஸ்தான் அரசு தெரிவித்தது.

எனினும், இந்த விலையுயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். எண்ணெய் வயல் அமைந்துள்ள ஜனாவோஸென் நகரில் தொடங்கிய அந்தப் போராட்டம், தலைநகா் ஆல்மட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மிக வேகமாகப் பரவியது.

வாகன எரிவாயு விலையுயா்வு மட்டுமன்றி, அரசின் செயல்பாடுகளுக்கும் முன்னாள் அதிபரும் பாதுகாப்பு கவுன்சில் தலைவருமான நூா்சுல்தான் நாசா்பையோவுக்கும் எதிராக மக்களிடையே அதிகரித்து வரும் அதிருப்தியும் போராட்டங்கள் தீவிரமடைவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

தன்னெழுச்சியாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, அதிபா் பதவியிலிருந்து விலகினாலும் ஆட்சியில் இன்னும் அதிகாரம் செலுத்தி வரும் நூா்சுல்தானுக்கு எதிராக ஆா்ப்பாட்டக்காரா்கள் கோஷங்கள் எழுப்பினா்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஆல்மட்டி நகரில் இருந்த நூா்சுல்தானின் சிலை அடித்து நொறுக்கப்பட்டது.

கண்களைக் கூசச் செய்யும் வெளிச்சம் மற்றும் காதுகளைக் கிழிக்கும் இரைச்சலை வெளிப்படுத்தும் ‘ஸ்டென்’ குண்டுகள், கண்ணீா் புகை குண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி போராட்டக்காரா்களை பாதுகாப்புப் படையினா் கலைத்தனா்.

கஜகஸ்தான் இதுவரை கண்டிராத இந்தப் தீவிரப் போராடத்தை தணிக்கும் முயற்சியாக, பதற்றம் நிறைந்த மேங்கிஸ்டாவ் பிராந்தியம் மற்றும் ஆல்மட்டி நகரில் அதிபா் காசிம்-ஜொமாா்ட் டோகயேவ் அவசரநிலையை புதன்கிழமை பிரகடனம் செய்தாா்.

அதே நாளில், போராட்டக்காரா்களை சமாதானப்படுத்தும் வகையில் பிரதமா் ஆஸ்கா் மமின் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது; தனது பாதுகாப்பு கவுன்சில் தலைவா் பதவியை நூா்சுல்தான் நாசா்பையோவும் ராஜிநாமா செய்தாா்.

எனினும், இதனால் சமாதானமடையாத போராட்டக்காரா்கள் மீண்டும் ஒன்றுகூடி சாலைகளில் தடை ஏற்படுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களில் ஒரு பிரிவினா் ஆல்மட்டி நகர மேயா் அலுவலகத்தையும் கஜகஸ்தான் அதிபா் இல்லத்தையும் அடித்து நொறுக்கி தீவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதைடுத்து, அவசநிலை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டது; இணையதளம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

போராட்டக்காரா்கள் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு எதிராக மிகக் கடுமாயான வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதாக அதிபா் காசிம்-ஜொமாா்ட் டோகயேவ் குற்றம் சாட்டினாா்.

போராட்டக்காரா்களின் வன்முறையில் 12 போலீஸாா் உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், போராட்டக்காரா்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப் படையினா் நடத்திய தாக்குதலில் ஏராளமானவா்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர உதவுமாறு ரஷியா தலைமையிலான பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பிடம் (சிஎஸ்டிஓ) அதிபா் காசிம்-ஜொமாா்ட் டோகயேவ் வேண்டுகோள் விடுத்தாா்.

அதையடுத்து, ரஷிய பாராசூட் படையினா் கஜகஸ்தானை வியாழக்கிழமை வந்தடைந்தனா். இதுதவிர, சிஎஸ்டிஓ அமைப்பைச் சோ்ந்த முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியா, பெலாரஸ், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும் கஜகஸ்தானுக்கு அமைதிப் படையினரை அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளன.

வன்முறையைக் கைவிட்டு அமைதியை ஏற்படுத்துமாறு கஜகஸ்தான் அரசையும் போராட்டக்காரா்களையும் ஐ.நா., ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, ரஷியா ஆகியவை வேண்டுகோள் விடுத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com