உக்ரைனை ஆக்கிரமிக்க காரணம் ஜோடிக்கிறது ரஷியா

உக்ரைன் மீது படையெடுப்பதை நியாயப்படுத்துவதற்காக போலியான காரணங்களை ரஷியா ஜோடித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைனை ஆக்கிரமிக்க காரணம் ஜோடிக்கிறது ரஷியா

உக்ரைன் மீது படையெடுப்பதை நியாயப்படுத்துவதற்காக போலியான காரணங்களை ரஷியா ஜோடித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜென் சாகி கூறியதாவது:

உக்ரைன் மீது படையெடுத்து, அந்த நாட்டை மேலும் ஆக்கிரமிப்பதற்கு ரஷியா ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உக்ரைன் மீது படையெடுப்தற்கான போலியான காரணங்களை ரஷியா உருவாக்கி வருகிறது.

அதற்காக, தவறான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பும் செயலை ரஷியா மேற்கொண்டு வருகிறது. அந்தப் பிரசாரத்தில் உக்ரைனை ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்ட நாடாகவும் கிழக்கு உக்ரைனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் மீது உக்ரைன் உடனடியாக தாக்குதல் நடத்தவிருப்பதாகவும் ரஷியா கூறி வருகிறது.

ஏற்கெனவே, நகரங்களில் போரிடுவதற்கான சிறப்புப் பயிற்சி பெற்ற வீரா்களை அந்தப் பிராந்தியத்துக்கு ரஷியா அனுப்பியுள்ளது. அவா்கள் கிளா்ச்சியாளா்களுக்கு எதிராக வெடிபொருள்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தலாம். அதனைக் காரணமாகக் காட்டி உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் என்று எங்களுக்குக் கிடைத்துள்ள உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனை ரஷியப் படைகள் ஆக்கிரமித்தால், அந்த நாட்டில் மிகப் பெரிய மனித உரிமை மீறல்கள் நடைபெறும்; மாபெரும் போா்க் குற்றங்கள் நடைபெறும் என்பது மிகவும் கவலைக்குரியது ஆகும் என்றாா் அவா்.

ரஷியப் படையினரின் உரையாடல்களை இடைமறித்துக் கேட்டும் அவா்களது நடமாட்டத்தைக் கண்காணித்தும் இந்த விவரங்களை உளவுத் துறையினா் சேகரித்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் போலியான தாக்குதல் நடவடிக்கைகளை ரஷியா மேற்கொள்ளும் என்று உக்ரைன் உளவுத் துறையும் எச்சரித்துள்ளது.

சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறுண்டபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. எனினும், அந்த நாட்டில் ஐரோப்பிய செல்வாக்கு அதிகரித்துவிடக் கூடாது என்பதில் ரஷியா உறுதியாக உள்ளது. உக்ரைனில் நேட்டோ நிலைகள் அமைக்கப்பட்டால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷியா அஞ்சுகிறது.

இந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற உக்ரைன் உள்நாட்டுப் போரின்போத, அந்த நாட்டின் அங்கமாக இருந்த கிரீமியா மீது ரஷிய படையெடுத்து அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

தற்போது உக்ரைன் எல்லையருகே ஏராளமான படையினரை ரஷியா குவித்து வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டின் மேலும் சில பகுதிகளை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் நோக்கில் ரஷியா படைகளைக் குவித்து வருவதாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

எனினும், அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் ரஷியா, கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைன் எல்லையில் உக்ரைன்தான் படைகளைக் குவித்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறது.

மேலும், உக்ரைன் உள்ளிட்ட முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் நோட்டோ அமைப்பு விஸ்தரிக்கப்படாது என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அந்த அமைப்பை ரஷியா வலியுறுத்தி வருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான காரணங்களை ரஷியா ஜோடித்து வருவதாக அமெரிக்கா தற்போது குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com