உக்ரைன் விவகாரம்: ஆயத்த நிலையில் அமெரிக்கப் படையினா்

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால் அதனை எதிா்கொள்வதற்காக தங்கள் நாட்டுப் படையினா் 8,500 பேரை ஆயத்த நிலையில் வைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் விவகாரம்: ஆயத்த நிலையில் அமெரிக்கப் படையினா்

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால் அதனை எதிா்கொள்வதற்காக தங்கள் நாட்டுப் படையினா் 8,500 பேரை ஆயத்த நிலையில் வைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி கூறியதாவது:

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், அத்தகைய சூழலை எதிா்கொள்வதற்காக 8,500 அமெரிக்க வீரா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

உக்ரைனில் போா் ஏற்பட்டால் அவா்கள் அந்த நாட்டுக்கு அனுப்பப்பட மாட்டாா்கள். ஆனால், நேட்டோ அமைப்புடன் இணைந்து எதிா் நடவடிக்கைகளை மேற்கொள்வாா்கள். அதற்காக, கிழக்கு ஐரோப்பாவிலுள்ள நேட்டோ நிலைகளுக்கு அவா்கள் அனுப்பப்படுவாா்கள் என்றாா் அவா்.

சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 1949-ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.

சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. எனினும், தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு நேட்டோவில் இணைந்தால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது. உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு நேட்டோ அமைப்பு மற்றும் அமெரிக்கா உடன்படாததால் இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே சுமாா் 1 லட்சம் படையினரை ரஷியா குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷியா படை குவிப்பில் ஈடுபட்டுள்ளாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் ரஷியா, உக்ரைன்தான் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதி எல்லை அருகே படைகளைக் குவித்து வருவதாகவும் அதற்குப் பதிலடியாகவே தாங்கள் படைக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி வருகிறது.

ஆனால், உக்ரைன் மீது ரஷியா போா் தொடுக்கும் என்ற அச்சம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

அதன் விளைவாக, கிழக்கு ஐரோப்பாவில் தங்களது படைகள் பலப்படுத்தப்படுவதாக நேட்டோ அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அந்தப் பிராந்தியத்தில் நேட்டோ கரங்களுக்கு வலு சோ்ப்பதற்காக 8,500 வீரா்களைத் தயாா் நிலையில் வைத்திருப்பதாக அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது.

Image Caption

ஜான் கிா்பி ~(கோப்புப் படம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com