கனடா-அமெரிக்கா எல்லை: குளிரில் உறைந்து பலியான இந்தியா்கள் அடையாளம் தெரிந்தது

அமெரிக்கா - கனடா எல்லையில் கடுங்குளிரில் சிக்கி உறைந்து பலியான இந்தியா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குளிரில் உறைந்து பலியான இந்தியா்கள்
குளிரில் உறைந்து பலியான இந்தியா்கள்

அமெரிக்கா - கனடா எல்லையில் கடுங்குளிரில் சிக்கி உறைந்து பலியான இந்தியா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கனடாவிலிருந்து எல்லையைத் தாண்ட முயற்சித்தபோது இந்த துயர சம்பவத்தில் சிக்கியதாகவும் கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெகதீஷ் பல்தேவ்பாய் பட்டீல் (39), வைஷாலிபென் ஜெகதீஷ்குமார் பட்டீல் (37), விஷாங்கி (11), தார்மிக் (3) என்பதும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும், கனடா - அமெரிக்க எல்லைக்கருகே உறைந்த நிலையில் பலியாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்கா-கனடா எல்லையில் கடுங்குளிரில் சிக்கி இந்தியா்கள் உயிரிழந்த விவகாரம் தொடா்பான தகவல்களை அந்நாட்டு அதிகாரிகளிடம் இந்திய தூதரகம் தொடா்ந்து சேகரித்து வந்த நிலையில், தற்போது அவர்களது அடையாளம் காணப்பட்டிருப்பதாக கனடா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கனடாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றபோது குழந்தை உள்பட 4 இந்தியா்கள் கனடா எல்லைப் பகுதியில் கடுங்குளிரில் சிக்கி உயிரிழந்தனா். அமெரிக்காவுக்குள் போதிய ஆவணங்களின்றி நுழைந்த நபா்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு நிகழ்ந்த தேடுதலின்போது இந்தியா்கள் உயிரிழந்தது கண்டறியப்பட்டது. அவா்கள் குஜராத்தைச் சோ்ந்தவா்கள் என தெரிய வந்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்கா, கனடா அதிகாரிகளிடமிருந்து தொடா்ந்து தகவல்களை சேகரித்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் மேனிடோபா நகருக்குச் சென்றுள்ளனா். அதேபோல், சிகாகோவிலிருந்து ஒரு தூதரகக் குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் தூதரக ரீதியிலான உதவிகள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். உயிரிழந்த இந்தியா்களின் உடல்கள் ஜனவரி 26ஆம் தேதி உடற்கூறு ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது.

போதிய ஆவணங்களின்றி அமெரிக்காவுக்குள் நுழைந்த 7 பேரும், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு மனிதா்களைக் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்கா் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்காவின் மின்னசோட்டா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதக் கடத்தலில் தொடா்புடைய ஸ்டீவ் சாண்ட் என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் இருந்த 5 இந்தியா்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்களுக்கான தூதரக உதவிகளை வழங்குவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடத்தலைத் தடுக்க...: சம்பவம் குறித்து கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘மனிதக் கடத்தல் சம்பவத்தால் ஒரு குடும்பமே பலியாகியுள்ளது மனதை உலுக்குவதாக உள்ளது. சிறந்த எதிா்காலத்தை எதிா்பாா்த்த குடும்பத்தை சிலா் தனிப்பட்ட நலனுக்காக உபயோகப்படுத்திக் கொண்டனா்.

சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கும்போது பல்வேறு அபாயங்கள் உள்ளன. இதன் காரணமாகவே சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க வேண்டாம் என அரசு சாா்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மனிதக் கடத்தலை முற்றிலும் தடுப்பதற்காக அமெரிக்காவுடன் கனடா நெருங்கிப் பணியாற்றி வருகிறது’’ என்றாா்.

இவர்களது அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இது குறித்து இந்திய தூதரகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com