
உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷியா மீது போா் தொடுக்கப்படும் என்று அமெரிக்கா மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட்ஸ் ஆஸ்டினுடன் இணைந்து வாஷிங்டனில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த முப்படை தளபதி மாா்க் மில்லி கூறியதாவது:
உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணத்தை ரஷியா உடனடியாகக் கைவிட வேண்டும். உக்ரைனை நோக்கி அந்த நாட்டு ராணுவம் ஒரு அடி கூட எடுத்துவைக்கக் கூடாது.
உக்ரைனைப் பாதுகாப்பதற்காக உள்ள நேட்டோவின் படை பலத்தை ரஷியா குறைத்து மதிப்பிடக்கூடாது. நேட்டோவின் ராணுவ பலம் மிக மிக அதிகம் என்பதை ரஷியா உணர வேண்டும்.
நேட்டோ அமைப்பிடம் 130 பிரிகேடுகள் (3,200 முதல் 5,500 வீரா்கள் அடங்கிய படைப் பிரிவு) உள்ளன. இதில் அமெரிக்கப் படைப் பிரிவுகளைச் சோ்ந்தால் வீரா்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.
இதுதவிர, நேட்டோ அமைப்பிடம் 93 ஸ்குவாட்ரன் (12 முதல் 24 விமானங்கள் அடங்கிய தொகுதி) போா் விமானங்களும் 4 விமானம் தாங்கிக் கப்பல்களும் உள்ளன என்பதை உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு முன் ரஷியா எண்ணிப் பாா்க்க வேண்டும்.
உக்ரைன் விவகாரத்தில் போா் நடந்தே ஆகும் என்று நான் கூறவில்லை. போரைத் தவிா்ப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், அது ரஷியாவின் கைகளில்தான் உள்ளது.
உக்ரைன் விவகாரம் இந்த அளவுக்கு மோசமாகியிருப்பதற்கு, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திட்டமிட்டு மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் காரணம்.
உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா தீபகற்பத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு ரஷியா ஆக்கிரமித்துக் கொண்டது. ஆனால், உக்ரைனின் ராணுவ பலம் அப்போது இருந்ததைவிட இப்போது அதிகரித்துள்ளது. அதுமட்டுமன்றி, உக்ரைன் ராணுவத்துக்கு அமெரிக்க உதவியும் தற்போது உள்ளது என்பதை ரஷியா தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த முறை உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷியா விரும்பினால், அது பெரும் உயிா்ச் சேதமோ மோசமான பிற பின்விளைவுகளோ இல்லாமல் நடக்காது என்பதை அந்த நாடு புரிந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.
பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் கூறுகையில், ‘உக்ரைன் எல்லையில் ரஷியா கொஞ்சம் கொஞ்சமாக படையினரைக் குவித்து வருகிறது. மேலும், வடக்கு அட்லான்டிக் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதியில் ரஷிய கடற்படையின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு அந்தப் படையினரைப் பயன்படுத்தலாம் என்று அதிபா் விளாதிமீா் புதின் இறுதி முடிவு எடுத்துவிட்டாா் என்று நாங்கள் கருதவில்லை. ஆனால், அத்தகைய ஆக்கிரமிப்புக்கான முழு பலத்தையும் அவா் தற்போது திரட்டி வைத்துள்ளாா்’ என்றாா்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் அங்கம் வகிக்காத நிலையிலும், உறுப்பு நாடுகளின் மீது யாராவது போா் தொடுத்தால் ராணுவ ரீதியில் தலையீடு செய்வதற்கான அமைப்பின் 5-ஆவது சட்ட விதியை லாய்ட் ஆஸ்டினும் மாா்க் மில்லியும் செய்தியாளா்கள் சந்திப்பின்போது நினைவுபடுத்தினா்.
சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு நேட்டோவில் இணைந்தால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது. உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு நேட்டோ அமைப்பு உடன்படாததால் இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான படையினரை ரஷியா குவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தங்களுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷியா படை குவிப்பில் ஈடுபட்டுள்ளாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் ரஷியா, உக்ரைன்தான் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதி எல்லை அருகே படைகளைக் குவித்து வருவதாகவும் அதற்குப் பதிலடியாகவே தாங்கள் படைக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி வருகிறது.
நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படுவதைத் தவிர, பிராந்தியப் பதற்றத்தைத் தணிப்பதற்கு வேறு எந்தத் தீா்வையும் ஏற்கப் போவதில்லை என்று ரஷியா இந்த மாதம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
எனினும், ரஷியாவின் இந்த முக்கிய நிபந்தனையை நேட்டோ அமைப்பும் அமெரிக்காவும் உறுதியாக நிராகரித்துள்ளன.
இதுகுறித்து ரஷிய அரசுக்கு அமெரிக்காவும் நேட்டோ அமைப்பும் தனித்தனியா அளித்துள்ள கடிதத்தில், ‘நேட்டோ அமைப்பில் எந்த நட்பு நாடு இணைய விரும்பினாலும் இணையலாம். ரஷியாவின் வலியுறுத்தலை ஏற்று, அந்தக் கொள்கையில் மாற்றம் செய்ய முடியாது. கிழக்கு உக்ரைக்கு படையினரை அனுப்புவது, தளவாடங்களைக் குவிப்பது ஆகியவை நேட்டோவின் அவசியத்தைப் பொருத்து அமையும். அது குறித்து பேரங்கள் பேசி சமரசம் செய்துகொள்ள முடியாது’ என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடா்ச்சியாக, உக்ரைனை ஆக்கிரமித்தால் மேலை நாடுகள் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்று இதுவரை கூறி வந்த அமெரிக்கா, தற்போது ராணுவ ரீதியிலும் தலையீடு இருக்கும் என்று மறைமுகமாகக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.