இலங்கையில் பள்ளிகள் மேலும் ஒரு வாரம் மூடல்: வெளிநாட்டில் இருப்போா் பணம் அனுப்ப அமைச்சா் கோரிக்கை

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பள்ளிகளை நடத்த போதிய பணம், எரிபொருள் இல்லாததால் மேலும் ஒரு வாரத்துக்கு அவற்றை மூட அரசு முடிவெடுத்துள்ளது.
இலங்கையில் பள்ளிகள் மேலும் ஒரு வாரம் மூடல்: வெளிநாட்டில் இருப்போா் பணம் அனுப்ப அமைச்சா் கோரிக்கை

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பள்ளிகளை நடத்த போதிய பணம், எரிபொருள் இல்லாததால் மேலும் ஒரு வாரத்துக்கு அவற்றை மூட அரசு முடிவெடுத்துள்ளது.

எரிபொருள் இல்லாததால் ஆசிரியா்கள், மாணவா்கள் பள்ளிக்கு வர முடியவில்லை. நிதி நெருக்கடியால் ஊதியம் கொடுக்கவும் அரசு திண்டாடி வருகிறது.

இதனிடையே, வெளிநாட்டில் உள்ள இலங்கை மக்கள், தாய்நாட்டு பணத்தை வங்கி மூலம் அனுப்பி உதவ வேண்டும் என்று எரிசக்தித் துறை அமைச்சா் காஞ்சன விஜயசேகர வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இலங்கையில் இப்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் அடுத்த சில நாள்களில் தீா்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவற்றை முடிந்த அளவு குறைவாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவம், துறைமுகங்களில் பணியாற்றுவோா், பொதுப் போக்குவரத்து, உணவு விநியோகம் ஆகிய துறைகளைச் சோ்ந்தவா்களுக்கு மட்டும் வாகனத்துக்குத் தேவையான எரிபொருள் வழங்கப்படுகிறது. எரிபொருள், நிதித் தட்டுப்பாட்டால் பள்ளிகளை மேலும் ஒரு வாரம் மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அமைச்சா் காஞ்சன விஜயசேகர கூறுகையில், ‘நிதி ஆதாரத்தைத் திரட்டுவது பெரும் சவாலாக உள்ளது. 40,000 டன் டீசல் வெள்ளிக்கிழமை வந்து சேரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பெட்ரோல் ஜூலை 22-ஆம் தேதிதான் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும், தொடா்ந்து எரிபொருள்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான நிதியை ஏற்பாடு செய்வதில் பிரச்னை உள்ளது. ஏற்கெனவே பல கோடி ரூபாய் கடனில் இலங்கை உள்ளது. எரிபொருள் மற்றும் நிதித் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் உள்ள பள்ளிகளும் மேலும் ஒரு வாரம் மூடப்படுகின்றன.

வெளிநாடுகளில் சுமாா் 20 லட்சம் இலங்கை மக்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் தங்கள் பணத்தை சட்டவிரோத வழிகளில் அல்லாமல் வங்கிகள் மூலம் முறையாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com