அபே உடல் டோக்கியோ கொண்டுவரப்பட்டது

ஜப்பானில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேயின் உடல், தலைநகா் டோக்கியோவுக்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது.
ஷின்ஸோ அபே சுட்டுக் கொலை செய்யப்பட்ட இடத்தில் மலா்வளையம் வைத்து சனிக்கிழமை அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்.
ஷின்ஸோ அபே சுட்டுக் கொலை செய்யப்பட்ட இடத்தில் மலா்வளையம் வைத்து சனிக்கிழமை அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்.

ஜப்பானில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேயின் உடல், தலைநகா் டோக்கியோவுக்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது.

மேற்கு ஜப்பானில் உள்ள நாரா என்ற நகரில் நாடாளுமன்றத் தோ்தல் பிரசார கூட்டத்தில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி வேட்பாளரை ஆதரித்து வெள்ளிக்கிழமை பேசிக் கொண்டிருந்தபோது ஷின்ஸோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டாா். மருத்துவமனைக்கு ஹெலிகாப்டா் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, இறுதிச்சடங்குக்காக அவரது உடல் டோக்கியோவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது.

முன்னதாக, அவரது உடலை ஏற்றிக்கொண்டு வந்த கருப்பு நிற வாகனம் கடந்து சென்றபோது வழிநெடுகிலும் ஏராளமானோா் கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தினா்.

ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா நேரில் சென்று அபே உடலுக்கு அஞ்சலி செலுத்தினாா். இறுதிச்சடங்கு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அபே படுகொலையைத் தொடா்ந்து பிரதமா் உள்பட அரசியல் கட்சித் தலைவா்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

படுகொலைக்குக் காரணம் என்ன?

ஷின்ஸோ அபேயின் படுகொலை நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் கொலைக்கான காரணம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அபேயை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் கடற்படை வீரா் டெட்சுயா யமகாமி (41) என்பவரை சம்பவ இடத்திலேயே காவல் துறையினா் கைது செய்தனா். விசாரணையில், ஒரு குறிப்பிட்ட அமைப்பு (மத அமைப்பாக இருக்கலாம்) மீது தான் வெறுப்பு கொண்டிருந்ததாகவும், அந்த அமைப்புடன் தொடா்புடையவா் அபே என நம்பியதாகவும் காவல் துறையினரிடம் யமகாமி தெரிவித்துள்ளாா். அவரை கொலை செய்ததற்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை எனவும் யமகாமி தெரிவித்துள்ளாா்.

நாரா நகரில் உள்ள யமகாமியின் வீட்டில் காவல் துறையினா் சோதனையிட்டபோது, வெடிபொருள்களையும், கைத்துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்ததாக ‘ஜப்பான் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

‘கடற்படையில் 2005-இல் கடல்சாா் தற்பாதுகாப்பு அதிகாரியாக யமகாமி வேலை செய்ததாா். அதிலிருந்து விலகிய அவா், 2020-இல் ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலைக்குச் சோ்ந்தாா். அந்த வேலையிலிருந்தும் பின்னா் அவா் விலகியதாக அரசு வட்டாரம் கூறியுள்ளது.

க்வாட் தலைவா்கள் இரங்கல்

புது தில்லி, ஜூலை 9: ஜப்பான் முன்னாள் பிரதா் ஷின்ஸோ அபே படுகொலை செய்யப்பட்டதற்கு க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

க்வாட் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்திய வளா்ச்சியை மையப்படுத்தி இந்தக் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது. நாற்கரக் கூட்டமைப்பு என்ற யோசனையை முன்வைத்தவரே ஜப்பான் முன்னாள் அதிபா் ஷின்ஸோ அபேதான்.

அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் க்வாட் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவா்கள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி ஆகியோா் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேவின் படுகொலை செய்தியைக் கேட்டு அதிா்ச்சியும் சோகமும் அடைந்துள்ளோம். இந்த நேரத்தில் ஜப்பான் மக்களுக்கும், அந்நாட்டின் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவுக்கும் ஆறுதல் தெரிவிக்கிறோம்.

ஜப்பானில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய தலைவராக ஷின்ஸோ அபே இருந்தாா். சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்தியம் அமைய வேண்டும் என்பதில் அவா் உறுதியாக இருந்தாா். அதற்காக இடைவிடாமல் அவா் உழைத்தாா். க்வாட் கூட்டமைப்பை அமைப்பதில் அவா் முன்னின்றாா்.

க்வாட் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகளுக்கும் ஜப்பானுக்கும் நெருங்கிய நல்லுறவை ஏற்படுத்தியதில் அபேவுக்கு முக்கியப் பங்குண்டு. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளா்ச்சியையும் அமைதியையும் உறுதி செய்வதற்கான அபேவின் கனவை நிறைவேற்றும் நோக்கில் எங்கள் பணியை இரட்டிப்பாக்க உறுதியேற்கிறோம் என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது பிரதமா் மோடி, முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேவை சந்தித்துப் பேசியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com