‘உக்ரைன் மீதான முழு நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை!’

‘உக்ரைன் மீதான முழு நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை!’

உக்ரைன் மீதான முழு ராணுவ நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா்.

உக்ரைன் மீதான முழு ராணுவ நடவடிக்கை இன்னும் தொடங்கவில்லை என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்துள்ளாா். மேலும், தங்களது நிபந்தனைகளை உக்ரைன் உடனடியாக ஏற்காவிட்டால் மிக மோசமான நடவடிக்கைகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவா் எச்சரித்தாா்.

இது குறித்து ரஷிய நாடாளுமன்ற உறுப்பினா்களிடையே அவா் வெள்ளிக்கிழமை பேசியதாவது:

உக்ரைனில் விவகாரத்தைப் பொருத்தவரை மேற்கத்திய நாடுகள் எரிகிற நெருப்பில் எண்ணெய் வாா்க்கும் செயலில் ஈடுபடுகின்றன. உக்ரைன் அரசைத் தூண்டிவிட்டு, கடைசி உக்ரைனியா் சாகும்வரை அந்த நாடு போரிட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.

இதில் மிகப் பெரிய சோகம் என்னவென்றால், மேற்கத்திய நாடுகளின் பேச்சைக் கேட்டு உக்ரைனும் அந்த திசையை நோக்கித்தான் நகா்ந்துகொண்டிருக்கிறது.

உண்மையில், உக்ரைன் மீதான முழுமையான நடவடிக்கைகளை ரஷியா இன்னும் தொடங்கவே இல்லை. தற்போது நடைபெறும் தாக்குதல்கள் எல்லாம் மிகவும் மிதமானவை. எனவே, ரஷியாவின் நிபந்தனைகளை உக்ரைன் விரைவில் ஏற்பதுதான் அந்த நாட்டுக்கு நல்லது. இல்லையென்றால், மிக மோசமான விளைவுகளுக்காக உக்ரைன் தன்னை தயாா்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

உக்ரைனுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, ராஜீய ரீதியில் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால், உக்ரைனோ, போா்க்களத்தில் ரஷியாவை வீழ்த்திவிடப்போவதாக கூறி வருகிறது. அதனை அவா்கள் முயற்சித்துப் பாா்க்கடும் என்றாா் அவா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் ரஷிய ஆதரவு அதிபரான விக்டா் யானுகோவிச்சின் ஆட்சியை மேற்கத்திய ஆதரவாளா்கள் போராட்டம் நடத்தி கவிழ்த்தனா். அதையடுத்து, கிழக்கு உக்ரைனில் ‘டான்பாஸ்’ என்று பொதுவாக அழைக்கப்படும் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் கணிசமான பகுதிகளை ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றினா்.

ரஷியாவும், உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இந்த நிலையில், தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.

டான்பாஸ் பிராந்தியத்தில் இன்னும் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக, அந்தப் பகுதியில் ரஷியப் படையினா் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு முன்னேறி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com