
கோப்புப் படம்
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர வழிகள் உண்டு, ஆனால் அதனை சட்டப்படி செய்ய வேண்டும் என அந்நாட்டு பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மக்கள் அத்தியாவசியப் பொருள்களைப் பெறுவதற்கே திண்டாடி வருகின்றனர். பொருளாதார நெருக்கடியை சரி செய்யாத அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மற்றும் அதிபர் இல்லங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து தற்போது பிரதமர் அலுவலகத்திலும் பொதுமக்கள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
படிக்க | இலங்கை: பிரதமர் அலுவலகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள்
பிரதமர் அலுவலகத்தில் நுழைய முயன்றபோது, ராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 24 பேர் படுகாயமடைந்தனர்.
இதனிடையே அதிபர் கோத்தபய ராஜபட்ச ராணுவ விமானத்தின் மூலம் மாலத்தீவு சென்றார். அங்கும் கோத்தபயவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்தது. மாலத்தீவை விட்டு வெளியேற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து அவர், மாலத்தீவிலிருந்து புறப்பட்டார். அங்கிருந்து சிங்கப்பூர் அல்லது துபை செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், போராட்டக்களத்தில் இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பொதுமக்களில் ஒருவரான கல்ப்ராஜ், அதிபர் கோத்தபய ராஜபட்சவை இலங்கைக்கு கொண்டுவர சட்டப்பூர்வமான வழிகள் உள்ளன. மேலும், மக்களைத் தவிக்கவிட்டு நாட்டை விட்டு வெளியேறும் இதுபோன்ற குற்றவாளிகளை தண்டிக்கவும் சட்டம் உள்ளது. ஆனால், அதனைச் செய்ய வேண்டும்.
படிக்க | மாலத்தீவிலிருந்து புறப்பட்டார் கோத்தபய: அடுத்து எங்கே?
பிரதமரும், அதிபரும் மக்களுக்கு எதிராக கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் கோத்தபய ஜூலை 13ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்வதாகக் கூறினார். ஆனால் இப்போதுவரை அதனை செய்யவில்லை. இதனால், மக்கள் மிகுந்த கோபமடைந்துள்ளனர். அந்த கோபத்தின் விளைவாக தற்போது பிரதமர் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.