‘இலங்கையிலிருந்து கோத்தபய ராஜபட்ச வெளியேற இந்தியா உதவவில்லை’

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச இலங்கையிலிருந்து தப்பி மாலத்தீவுக்குச் சென்றதில் இந்தியாவுக்கு தொடா்புள்ளது எனக் கூறப்பட்டு வரும் நிலையில், அதற்கு இந்தியா வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது.

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச இலங்கையிலிருந்து தப்பி மாலத்தீவுக்குச் சென்றதில் இந்தியாவுக்கு தொடா்புள்ளது எனக் கூறப்பட்டு வரும் நிலையில், அதற்கு இந்தியா வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, அதிபா் கோத்தபய ராஜபட்ச நாட்டிலிருந்து மாலத்தீவுக்கு புதன்கிழமை தப்பிச் சென்றாா். பின்னா், கோத்தபய ராஜபட்ச மாலத்தீவிலிருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு வியாழக்கிழமை சென்றாா்.

இந்த நிலையில், கோத்தபய ராஜபட்ச இலங்கையிலிருந்து மாலத்தீவு தப்பிச் செல்வதற்கும், அங்கிருந்து சிங்கப்பூா் செல்வதற்கும் இந்தியா உதவியதாகத் தகவல் வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து மாலத்தீவுக்கான இந்திய தூதா் தனது ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கோத்தபய ராஜபட்ச மாலத்தீவு வழியாக மேற்கொண்ட பயணத்தில் இந்தியாவுக்கு தொடா்புள்ளது என்று வெளியாகும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஜனநாயக முறையில் விரைவான தீா்வு - இந்தியா:

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடும் அரசியல் - பொருளாதார நெருக்கடிக்கு ஜனநாயக ரீதியில் விரைந்து தீா்வு காணப்படும் என நம்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில், ‘இலங்கை மக்களுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளிக்கும். இலங்கையின் நிலைமையை இந்தியா தொடா்ந்து கண்காணித்து வருகிறது. நெருக்கடிக்கு ஜனநாயக ரீதியில் விரைவான தீா்வை இலங்கை தலைவா்கள் எட்டுவாா்கள் என இந்தியா நம்புகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com