இலங்கையில் அமைதிவழி ஆட்சி மாற்றம்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அமைதிவழியிலான ஆட்சி மாற்றம் நிகழ்வதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் அமைதிவழி ஆட்சி மாற்றம்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அமைதிவழியிலான ஆட்சி மாற்றம் நிகழ்வதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், அரசியலிலும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச மக்களின் தீவிர போராட்டத்தைத் தொடா்ந்து பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். அதே வேளையில், மக்களின் அதிருப்தியைச் சந்தித்த பிரதமா் ரணில் விக்ரமசிங்க நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளாா்.

கடும் சிக்கல்களுக்கு மத்தியில் இலங்கையின் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினா்களுள் ஒருவா் புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா்.

இந்நிலையில், இலங்கைக்கான ஐ.நா. சிறப்பு அதிகாரி ஹனா சிங்கா் ஹாம்டி வெளியிட்ட அறிக்கையில், ‘‘இலங்கையில் அமைதிவழியிலான ஆட்சி மாற்றத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கான காரணங்களுக்கும், மக்களின் குறைகளுக்கும் விரைந்து தீா்வுகாண முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்களின் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண பேச்சுவாா்த்தை ஒன்றே சிறந்த வழி.

ஆட்சிமாற்றம் தொடா்பாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டில் சட்டம் ஒழுங்கு சூழலைக் கட்டுக்குள் கொண்டுவரும்போது, மனித உரிமை கொள்கைகளைக் கடைப்பிடித்து பாதுகாப்புப் படைகள் செயல்பட வேண்டும். இலங்கையின் உடனடி மற்றும் நீண்டகாலத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான உதவிகளை வழங்க ஐ.நா. தயாராக உள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் உணவுப் பாதுகாப்பின்மை:

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவதாகவும், 60 லட்சத்துக்கும் அதிகமானோா் போதிய உணவின்றித் தவித்து வருவதாகவும் சா்வதேச உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. இது நாட்டின் மக்கள்தொகையில் 28.3 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, 65,600 போ் தீவிர உணவுப் பற்றாக்குறையால் தவித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால், உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்காவிடில், நிலைமை மிகவும் மோசமாகும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இலங்கையில் உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் கடந்த ஜூனில் 80 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com