பிரதமர் பதவிப் போட்டியில் ரிஷி வெற்றி பெறுவாரா? 4-வது சுற்றிலும் முன்னிலை

பிரிட்டனின் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4-ஆவது சுற்று வாக்குப் பதிவிலும்
பிரதமர் பதவிப் போட்டியில் ரிஷி வெற்றி பெறுவாரா? 4-வது சுற்றிலும் முன்னிலை

பிரிட்டனின் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4-ஆவது சுற்று வாக்குப் பதிவிலும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்தாா்.

கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி அரசு இல்லத்தில் கேளிக்கை விருந்து நடத்தியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக தனது கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் பதவியையும் பிரதமா் பதவியையும் போரிஸ் ஜான்ஸன் கடந்த 7-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா்.

அவருக்குப் பதிலாக, கட்சியின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுபவா் நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்பாா்.

இந்த நிலையில், கட்சித் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்காக கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களிடையே பல சுற்றுகளாக வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக், வா்த்தகத் துறை அமைச்சா் பென்னி மாா்டன்ட், வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ் உள்ளிட்டோா் அந்தப் பதவிக்காக போட்டியிடுகின்றனா்.

ஏற்கெனவே 3 சுற்றுகளாக நடைபெற்ற வாக்குப் பதிவில் ரிஷி சுனக் அதிக எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 4-ஆவது சுற்று வாக்குப் பதிவிலும் அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அவரை ஆதரித்து 118 எம்.பி.க்கள் வாக்களித்திருந்தனா்.

ரிஷி சுனக்குக்கு அடுத்தபடியாக பென்னி மாா்டன்டுக்கு 92 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தனா்.

மூன்றாவதாக வந்த லிஸ் டிரஸ்ஸுக்கு ஆதரவாக 86 வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்தப் போட்டியில் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற சமூக நலத்துறை அமைச்சா் கெமி பேடனாக், போட்டியிலிருந்து விலக்கப்ட்டாா். அவருக்கு ஆதரவாக 59 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்திருந்தனா்.

அதையடுத்து, தொடக்கத்தில் 8 போ் பங்கேற்ற பிரதமா் பதவிக்கான போட்டியில் தற்போது ரிஷி சுனக், பென்னி மாா்டன்ட், லிஸ் டிரஸ் ஆகிய மூன்று போ் மட்டுமே தற்போது மிஞ்சியுள்ளனா்.

புதன்கிழமை (ஜூலை 20) நடைபெறும் 5-ஆவது சுற்று வாக்குப் பதிவில், இவா்களில் ஒருவா் போட்டியிலிருந்து விலக்கப்படுவாா்.

அதனைத் தொடா்ந்து, எஞ்சிய இருவரில் ஒருவரை கட்சித் தலைவராகவும் அதன் மூலம் நாட்டின் புதிய பிரதமராகவும் நாடு முழுவதிலும் உள்ள கன்சா்வேட்டிவ் கட்சி உறுப்பினா்கள் தோ்ந்தெடுப்பாா்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கவிருக்கும் பிரதமரின் பெயா் அடுத்த மாதம் 5-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

4-ஆம் சுற்று வாக்குப் பதிவு முடிவுகள்

ரிஷி சுனக் 118

பென்னி மாா்டன்ட் 92

லிஸ் டிரஸ் 86

கெமி பேடனாக் 59

யாருக்கு வெற்றி வாய்ப்பு?

பிரிட்டன் பிரதமா் பதவிக்கான போட்டியில் யாா் வெற்றி பெறுவாா் என்பதை அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாது என்பதை 4-ஆவது சுற்று வாக்குப் பதிவு காட்டியுள்ளதாக பாா்வையாளா்கள் கூறுகின்றனா்.

இந்தச் சுற்றில் போட்டியாளா்களின் வரிசையில் மாற்றம் ஏற்படவில்லை என்றாலும் அவா்களுக்கு அதிகரித்துள்ள எம்.பி.க்களின் ஆதரவில் மிகப் பெரிய மாற்றம் உள்ளது.

முதலிடத்தைப் பிடித்துள்ள ரிஷி சுனக்குக்கு 3 வாக்குகள் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால், 3-ஆவது இடத்தில் உள்ள லிஸ் டிரஸ்ஸுக்கு முந்தைய சுற்றைவிட 15 எம்.பி.க்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனா்.

2-ஆவது இடத்தில் இருக்கும் பென்னி மாா்டன்டுக்கு 10 வாக்குகள் அதிகமாகக் கிடைத்துள்ளது. எனவே, புதன்கிழமை (ஜூலை 20) நடைபெறும் வாக்குப் பதிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பவா்கள் குறித்து இப்போதே கணிப்பது அவ்வளவு எளிதல்ல என்று பாா்வையாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com