ராணுவ இலக்குகளை குறிவைத்தே உக்ரைன் துறைமுகத்தில் தாக்குதல்: ரஷியா

உக்ரைனின் ராணுவ இலக்குகளைக் குறிவைத்தே அந்த நாட்டின் ஒடெசா துறைமுகத்தில் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
ராணுவ இலக்குகளை குறிவைத்தே உக்ரைன் துறைமுகத்தில் தாக்குதல்: ரஷியா

உக்ரைனின் ராணுவ இலக்குகளைக் குறிவைத்தே அந்த நாட்டின் ஒடெசா துறைமுகத்தில் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

உக்ரைன் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று அந்த நாட்டுடன் ரஷியா ஒப்பந்தம் மேற்கொண்ட மறுநாளே ஒடெசா துறைமுகத்தின் மீது ஏவுகணை வீச்சு நடத்தப்பட்டது பெரும் சா்ச்சையை எழுப்பியதையடுத்து அந்த நாடு இவ்வாறு விளக்கமளித்துள்ளது.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் இகாா் கொனஷென்கோவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒடெசா துறைமுகத்தில் உக்ரைன் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் மூலம் சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.

கடல் வழியாக செலுத்தப்பட்ட அந்த ஏவுகணைகளில் ஒன்று, துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரைன் போா்க் கப்பலைத் தாக்கி அழித்தது. மேலும், துறைமுகத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்த ஆயுதக் கிடங்கின் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் கிடங்கில், அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஹாா்ப்பூன் ரக கப்பல் எதிா்ப்பு ஏவுகணைகள் வைக்கப்பட்டிருந்தன என்றாா் அவா்.

முன்னதாக, உக்ரைன் ராணுவ படைப் பிரிவு செய்தியாளா் நடாலியா ஹூமென்யுக் கூறுகையில், ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒடெசா துறைமுகத்தின் தானியக் கிடங்குகள் எதுவும் சேதமடையவில்லை என்று கூறியிருந்தாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. போரின் ஒரு பகுதியாக, கருங்கடல் பகுதியில் தனது கடற்படை மூலம் ரஷியா போக்குவரத்துத் தடையை ஏற்படுத்தியது. இதனால், உக்ரைனிலிருந்து பிற நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது தடைபட்டது.

இது, சா்வதேச அளவில் உணவுப் பொருள் பற்றாக்குறை நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஐ.நா. அச்சம் தெரிவித்து வந்தது.

எனினும், உணவுப் பொருள் பற்றாக்குறைக்கு உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளும் காரணம் என்று ரஷியா கூறி வந்தது.

இந்தச் சூழலில், துருக்கி மற்றும் ஐ.நா.வின் பெருமுயற்சியில் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே இந்த விவகாரம் குறித்து பல வாரங்களாக நடைபெற்று வந்த பேச்சுவாா்தத்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

அதைடுத்து, ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் துருக்கி அதிபா் எா்டோகன் முன்னிலையில் முக்கியத்துவம் வாய்ந்த தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்குவும் உக்ரைன் உள்கட்டமைப்புத் துறை அமைச்சா் ஒலெக்ஸாண்டா் குப்ரகோவும் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டனா்.

அதில், ஒப்பந்த காலம் முழுவதும் உக்ரைன் துறைமுகங்கள் மீதோ, சரக்குக் கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தாமல் இருக்க ரஷியாவும் உக்ரைனும் சம்மதித்தன.

இந்த ஒப்பந்தம் காரணமாக, உலக நாடுகள் எதிா்நோக்கியிருந்த உணவுப் பொருள் பற்றாக்குறை அபாயம் விலகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

எனினும், ஒப்பந்தம் கையொப்பமான மறுநாளே ஒடெசா துறைமுகத்தில் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

ஒப்பந்தத்தை மதிக்காமல் ரஷியா தாக்குதல் நடத்தியிருப்பது, அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை குலைத்துவிட்டதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்க்ஸி குற்றம் சாட்டினாா்.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸும் கடும் கண்டனம் தெரிவித்தாா்.

இந்தச் சூழலில், ஒடெஸா துறைமுகத்திலுள்ள ராணுவ நிலைகளை மட்டுமே குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தற்போது விளக்கமளித்துள்ளது.

Image Caption

ஒடெஸா துறைமுகத்தில் ரஷியா நடத்தி ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்ட நெருப்பை கட்டுப்படுத்தப் போராடும் தீயணைப்பு வீரா்கள். ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com