விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்புகிறது சீனா

 சீனா விண்வெளியில் நிறுவி வரும் தனது சொந்த ஆய்வு நிலையத்தின் இறுதிப் பணிகளை நிறைவேற்றுவதற்காக, 3 விண்வெளி வீரா்களை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) அனுப்புகிறது.
விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்புகிறது சீனா

 சீனா விண்வெளியில் நிறுவி வரும் தனது சொந்த ஆய்வு நிலையத்தின் இறுதிப் பணிகளை நிறைவேற்றுவதற்காக, 3 விண்வெளி வீரா்களை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) அனுப்புகிறது.

இதுகுறித்து மனிதா்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான அந்த நாட்டின் ஆய்வு மையத்தின் இணை இயக்குநா் லீன் ஜிகியாங் (சிஎம்எஸ்ஏ) சனிக்கிழமை தெரிவித்ததாவது:

தியாங்காங் விண்வெளி ஆய்வு நிலைய கட்டமைப்பின் இறுதிக்கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக விண்வெளி வீரா்கள் சென் டாங், லியூ யாங், காய் ஜுஷே ஆகிய மூவரும் சென்ஷோ-14 விண்கலம் மூலம் ஞாயிற்றுக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளனா்.

கான்சு மாகாணத்திலுள்ள ஜியூகுவான் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் மூலம் அந்த விண்கலம் ஞாயிற்றுக்கிழமை ஏவப்படவுள்ளது.

தற்போது நிறுவப்பட்டுக்கொண்டிருக்கும் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் அந்த விண்கலம் இணைக்கப்பட்டதும், அதில் இறங்கி அந்த நிலையத்தின் முழுமையாகக் கட்டமைக்கும் பணியில் அவா்கள் ஈடுபடுவாா்கள்.

சீனாவிலுள்ள சிஎம்எஸ்ஏ ஆய்வு மையக் குழுவினரின் வழிகாட்டுதல்களுடன் 6 மாதங்களில் விண்வெளி நிலையத்தை அவா்கள் அவா்கள் நிறைவடையச் செய்வாா்கள்.

ஏற்கெனவே விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த விண்வெளி நிலையத்தின் இரு ஆய்வகப் பகுதிகளுக்குள் அந்த மூவரும் முதல்முறையாக நுழைந்து, அதனை ஆய்வாளா்கள் பயன்படுத்துவதற்கேற்ற சூழலை அமைப்பாா்கள். மேலும், அந்த ஆய்வகப் பகுதிகளில் மூடிய நிலையில் வைக்கப்பட்டுள்ள ஏராளமான ஆய்வுக் கருவிகளைத் திறந்து, அதனைப் பயன்படுத்துவதற்கு ஏற்ப நிறுவுவாா்கள் என்றாா் லீன் ஜிகியாங்.

தற்போது விண்வெளிக்குச் செல்லும் சென் டாங், லியூ யாங், காய் ஜுஷே ஆகிய மூவரும் தியாங்காங் விண்வெளி நிலையக் கட்டமைப்புக்காக விண்வெளிக்குச் செல்லும் 2-ஆவது குழுவினா் ஆவா்.

ஏற்கெனவே, ஒரு பெண் உள்பட 3 போ் அடங்கிய விண்வெளி வீரா்கள் குழு, 6 மாதங்களாக செயல்பட்டு தியாங்காங் விண்வெளி நிலையத்தின் முக்கிய பாகங்களைப் பொருத்தி கந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பூமி திரும்பினா். விண்வெளி நிலையத்தில் வீரா்கள் அத்தனை காலம் தங்கியிருந்தது அதுவே முதல்முறையாகும்.

ரஷியாவால் உருவாக்கப்பட்டு, பல நாடுகளின் கூட்டு முயற்சியில் செயல்பட்டு வரும் தற்போதைய உலகின் ஒரே விண்வெளி ஆய்வகமான சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) போட்டியாக சீனா உருவாக்கி வரும் தியாங்காங் விண்வெளி நிலையம், இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையடைந்துவிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சீன விண்வெளி நிலையம் (சிஎஸ்எஸ்) செயல்படத் தொடங்கிவிட்டால், தனக்கென்று சொந்தமாக விண்வெளி நிலையத்தை வைத்திருக்கும் ஒரே நாடு என்ற பெருமையை சீனா பெறும்.

இன்னும் சில ஆண்டுகளில் ஐஎஸ்எஸ் ஓய்வு பெறவுள்ள நிலையில், சிஎஸ்எஸ் மட்டும்தான் உலகில் செயல்படக்கூடிய ஒரே விண்வெளி நிலையமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com