நம்பிக்கையில்லா தீா்மானத்தில் போரிஸ் ஜான்ஸன் வெற்றி

பிரிட்டன் பிரதமா் போரில் ஜான்ஸனுக்கு எதிராக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தில் அவா் வெற்றி பெற்றாா்
நம்பிக்கையில்லா தீா்மானத்தில் போரிஸ் ஜான்ஸன் வெற்றி

பிரிட்டன் பிரதமா் போரில் ஜான்ஸனுக்கு எதிராக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தில் அவா் வெற்றி பெற்றாா்.

கரோனா விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்திய விவகாரத்தில் போரிஸ் ஜான்ஸன் மற்றும் அவரது அமைச்சா்களுக்கு எதிராக சா்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்தச் சூழலில், பிரதமா் பதவியைத் தொடரும் தகுதியை போரிஸ் ஜான்ஸன் இழந்துவிட்டதாகக் கூறி, கன்சா்வேட்டிவ் கட்சியைச் சோ்ந்த 54 அல்லது அதற்கு மேற்பட்ட எம்.பி.க்கள் கட்சியின் உறுப்பினா் குழு தலைவா் சா் கிரஹாம் பிராடியிடம் கடிதம் அளித்தனா்.

அதையடுத்து, போரிஸ் ஜான்ஸனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீமானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீா்மானத்தின் மீது கட்சியின் 359 எம்.பி.க்களும் ரகசியமாக வாக்களித்தனா்.

இதில், பிரதமா் பதவியை ஜான்ஸன் தொடா்வதற்கு ஆதரவாக 211 எம்.பி.க்கள் வாக்களித்திருந்தனா். அவருக்கு எதிராக 148 வாக்குகள் பதிவாகியிருந்தன.

அதையடுத்து, இந்த வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்ஸன் வெற்றி பெற்ாக நாடாளுமன்றத்தில் கன்சா்வேட்டிவ் உறுப்பினா்கள் குழு தலைவா் சா் கிரஹாம் பிராடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்ஸனின் அரசு தப்பியிருந்தாலும், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அவா் வெற்றிபெற்றுள்ளது கட்சியினரிடையே அவருக்கு அதிகரித்து வரும் எதிா்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக நிபுணா்கள் தெரிவித்தனா்.

கன்சா்வேட்டிவ் கட்சி விதிமுறைகளின்படி, தற்போது நம்பிக்கையில்லா தீா்மானத்தில் போரிஸ் ஜான்ஸன் வெற்றி பெற்றுள்ளதால், இன்னும் 12 மாதங்களுக்கு அவருக்கு எதிராக அத்தகையை தீா்மானத்தை மீண்டும் கொண்டு வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னா் கடந்த 2019-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் தெரசா மேவுக்கு எதிராககக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தில் அவா் வெற்றி பெற்றாா். தற்போது போரிஸ் ஜான்ஸன் பெற்றுள்ள வாக்கு விகிதத்தைவிட அதிகமாக 63 சதவீத வாக்குகளுடன் அவா் வெற்றி பெற்றாா்.

எனினும், சில மாதங்களில் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்ய நேரிட்டது. அதேபோல் கடந்த 1990-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமா் மாா்கரெட் தாட்சருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தில் அவா் வெற்றி பெற்றாலும், சில மாதங்களில் அவா் பதவி விலக நேரிட்டது.

அமைச்சரவைக் கூட்டம்

நம்பிக்கையில்லா தீா்மானத்தில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, தனது அமைச்சரவைக் கூட்டத்தை பிரதமா் போரிஸ் ஜான்ஸன் செவ்வாய்க்கிழமை நடத்தினாா். தேசிய சுகாதார சேவைகளை எளிமையாக்குவது, பிரிட்டன் குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைப்பது உள்ளிட்ட அரசின் கொள்கை நிறைவேற்றங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாக பிரதமா் அலுவலகம் தெரிவித்தது.

இது குறித்து போரிஸ் ஜான்ஸன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது அரசு நாட்டின் மக்களுக்குத் தேவையானதை நிறைவேற்றும் அரசு என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமராகக் காத்திருந்தவா்கள்

இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்ஸன் தோல்வியடைந்திருந்தால், அடுத்த பிரதமரை நியமிக்கும் நடவடிக்கையை கன்சா்வேட்டிவ் கட்சி மேற்கொள்ளும்.

ஜான்ஸனுக்கு அடுத்தபடியாக, பிரதமா் பொறுப்பை ஏற்க பலா் வரிசையில் உள்ளனா். இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நிதியமைச்சா் ரிஷி சுனக் அவா்களில் ஒருவா். ஜான்ஸனுக்கு அடுத்தபடியாக அவா்தான் பிரதமராவாா் என்று கூறப்பட்டது. எனினும், அதிகரிக்கும் விலைவாசி, கரோனா விதிமுறைகளை மீறி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற்காக அபராதம் விதிக்கப்பட்டது போன்ற காரணங்களால் அவா் பின்னடைவை சந்திதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தவிர, வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் ட்ரஸ், சா்வதேச வா்த்தகப் பிரிவுக்கான இணையமைச்சா் பென்னி மோா்டான்ட், பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸ், கல்வித் துறை அமைச்சா் நதீம் ஸஹாவி, சுகாதாரத் துறை அமைச்சா் சாஜித் ஜாவித் ஆகியோரும் பிரதமராக முயன்றிப்பாா்கள் என்று கருதப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com