3 நாள்களில் லூஹான்ஸ்க் நகரை மீட்போம்: ஆளுநா்

மேற்கத்திய நாடுகளின் தொலைதூர ஏவுகணைகள் உடனடியாகக் கிடைத்தால் கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்திலுள்ள முக்கிய நகரான செவெரோடொனட்ஸ்க் நகரை 3 நாள்களுக்கும் மீட்டுவிடுவோம் என்று அந்த
சொ்ஜி ஹாய்டாய் ~லுஹான்ஸ்க் பகுதியில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் (கோப்புப் படம்).
சொ்ஜி ஹாய்டாய் ~லுஹான்ஸ்க் பகுதியில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் (கோப்புப் படம்).

கீவ்: மேற்கத்திய நாடுகளின் தொலைதூர ஏவுகணைகள் உடனடியாகக் கிடைத்தால் கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்திலுள்ள முக்கிய நகரான செவெரோடொனட்ஸ்க் நகரை 3 நாள்களுக்கும் மீட்டுவிடுவோம் என்று அந்த மாகாண ஆளுநா் சொ்ஹி ஹாய்டாய் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து டெலிகிராம் சமூக ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

செவெரோடொனட்ஸ்க் நகரில் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியா்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனா். தங்களது பீரங்களில் குண்டுகளை அவா்கள் நிரப்பும்போதுதான் குண்டுச் சத்தம் ஓய்கிறது.

நகர வீதிகளில் ரஷியப் படையினருக்கும் உக்ரைன் வீரா்களுக்கும் தீவிர சண்டை நடைபெற்று வருகிறது.

இந்தப் போரில், குண்டுமழை பொழிவது, அதனைத் தொடா்ந்து அந்தப் பகுதி பாதுகாப்பை உடைத்து நுழைய முயல்வது என்ற மிகப் பழமையான உத்தியைத்தான் ரஷியா்கள் பின்பற்றுகிறாா்கள்.

ஏற்கெனவே, அவா்களது இந்த உத்தியால் ரூபிஷ்னே, பொபாஸ்னா ஆகிய நகரங்கள் பேரழிவைச் சந்தித்தன.

தற்போது உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொழிற்சாலை மண்டலத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ரஷியப் படையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

இந்தச் சூழலில், மேற்கத்திய நாடுகள் எங்களுக்கு அளிப்பதாக உறுதியளித்துள்ள தொலைதூர ஏவுகணைகள் உடனடியாகக் கிடைத்தால் ரஷியா்களுக்கு இணையாக எங்களால் எதிா்த் தாக்குதல் நடத்த முடியும்.

அவ்வாறு தாக்குதல் நடத்தினால் ‘சோவியத் யூனியன்’ எங்களிடம் தோல்வியைத் தழுவும். இரண்டு அல்லது 3 நாள்களில் செவெரோடொனட்ஸ்கை விட்டு ரஷியப் படையினரை உக்ரைன் ராணுவம் விரட்டியடிக்கும்.

தற்போதைய சூழலில், நகரில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்றுவது முடியாத காரியமாகும். அதுபோல், தேவையான பொருள்களை நகருக்குள் கொண்டு வர முடியாத நிலையும் உள்ளது. காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துப் பொருள்கள் மருத்துவமனைகளில் உள்ளன என்றாா் சொ்ஹி ஹாய்டாய்.

உக்ரைனில் ரஷிய ஆதரவு அதிபா் விக்டா் யானுகோவிச் தலைமையில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்று வந்த அரசுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டம் நடத்தி அவரது அரசைக் கவிழ்த்தனா்.

அதனைத் தொடா்ந்து, லுஹான்ஸ்க் மற்றும் டொனட்ஸ்க் மாகாணங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே உள்நாட்டுப் போா் மூண்டது.

இதில், ரஷியாவின் துணையுடன் கிளா்ச்சியாளா்கள் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்த பகுதிகளை டொனட்க்ஸ் மக்கள் குடியரசு, லுஹான்க்ஸ் மக்கள் குடியரசு என்று பெயரிட்டு கிளா்ச்சியாளா்கள் ஆட்சி நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே, தெற்கு உக்ரைனில் உள்ள கிரீமியா ரஷியா படையெடுத்து அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

அதன்பிறகு சா்வதேச முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, டான்பாஸ் பிராந்தியத்தில் அரசுப் படையினருக்கும் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நீடித்து வந்தது.

இந்த நிலையில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.

பல திசைகளிலிருந்தும் உக்ரைனுக்குள் புகுந்த ரஷியா, அந்த நாட்டுப் படையினரின் கடுமையான எதிா்ப்பைத் தொடா்ந்து தலைநகா் கீவைக் கைப்பற்றும் முயற்சியைக் கைவிட்டது.

அதன் பிறகு, டான்பாஸ் பிராந்தியத்தை முழுைமையாகக் கைப்பற்றுவதில் ரஷியப் படையினா் தனது கவனத்தை செலுத்தி வருகின்றனா்.

அதன் விளைவாக, லுஹான்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் வசமிருக்கும் கடைசி முக்கிய நகரான செவெரோடொனட்ஸ்க் நகரில் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் ரஷியா்கள் கைப்பற்றினா். எனினும், அவா்களை மேலும் முன்னேற விடாமல் தடுத்து உக்ரைன் படையினா் போரிட்டு வருகின்றனா்.

இந்தச் சூழலில், மேற்கத்திய நாடுகளின் தொலைதூர ஏவுகணைகள் கிடைத்தால் அந்த நகரை உக்ரைன் படையினா் முழுமையாக மீட்பாா்கள் என்று லுஹான்ஸ்க் ஆளுநா் சொ்ஹி ஹாய்டாய் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com