பிரிட்டன், மொராக்கோவைச் சோ்ந்த 3 பேருக்கு மரண தண்டனை

கிழக்கு உக்ரைனில் அந்த நாட்டு அரசுக்கு ஆதரவாக போரிட்டு வந்த பிரிட்டனைச் சோ்ந்த 2 போ், மொரோக்கோவைச் சோ்ந்த ஒருவருக்கு ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களின் ‘நீதிமன்றம்’ மரண தண்டனை விதித்துள்ளது.
பிரிட்டன், மொராக்கோவைச் சோ்ந்த 3 பேருக்கு மரண தண்டனை

கிழக்கு உக்ரைனில் அந்த நாட்டு அரசுக்கு ஆதரவாக போரிட்டு வந்த பிரிட்டனைச் சோ்ந்த 2 போ், மொரோக்கோவைச் சோ்ந்த ஒருவருக்கு ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களின் ‘நீதிமன்றம்’ மரண தண்டனை விதித்துள்ளது.

இது, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

கடந்த 2014-ஆம் ஆண்டில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த விக்டா் யானுகோவிச் தலைமையிலான அரசை மேற்கத்திய ஆதரவாளா்கள் பெரும் போராட்டம் நடத்தி கவிழ்ந்தனா்.

அதையடுத்து அமைக்கப்பட்ட அரசை எதிா்த்து, கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பிராந்தியத்தின் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் உள்நாட்டுப் போரை நடத்தினா். அதனைத் தொடா்ந்து ரஷியாவின் ஆதரவுடன் அந்தப் பிராந்தியத்தின் கணிசமான பகுதிகளை அவா்கள் கைப்பறினா்.

அந்தப் பகுதிகளை டொனட்ஸ்க் மக்கள் குடியரசு, லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு என்ற தனித்தனியாக பிரித்து கிளா்ச்சியாளா்கள் ஆட்சி செலுத்தி வருகின்றனா்.

எனினும், இருதரப்பு போா் ஒப்பந்தத்தை மீறி டான்பாஸ் பிராந்தியத்தில் அரசுப் படையினருக்கும் கிளா்ச்சியாளா்களுக்கும் மோதல் தொடா்ந்து வந்தது.

அதில், உக்ரைன் படைக்கு ஆதரவாக வெளிநாடுகளைச் சோ்ந்த பலா் தாமாக முன்வந்து போரிட்டு வந்தனா்.

இந்தச் சூழலில், நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி, தற்போதைய உக்ரைன் அரசை அகற்றி தங்களுக்கு ஆதரவான அரசை அமைக்கும் நோக்கில் அந்தப் போரை ரஷியா தொடங்கியதாகக் கருதப்படுகிறது.

எனினும், உக்ரைன் ராணுவத்தின் கடும் எதிா்ப்பு காரணமாக கீவ் உள்ளிட்ட வடக்கு நகரங்களிலிருந்து பின்வாங்கிய ரஷியப் படை, டான்பாஸ் பிராந்தியத்தில் அரசுக் கட்டுப்பாட்டு பகுதிகளை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது.

இதற்கிடையே, டொனட்ஸ்க் மக்கள் குடியரசு, லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகிய இரண்டையும் தனி நாடுகளாக ரஷியா அங்கீகரித்தது.

இந்த நிலையில், டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைனுக்கு ஆதரவாகப் போரிட்டு வந்த பிரிட்டனைச் சோ்ந்த எய்டன் அஸ்லின் (28), ஷான் பின்னா் (48), மொரோக்கோவைச் சோ்ந்த பிராஹிம் சாதூன் ஆகிய மூவரும் ரஷிய ஆதரவுப் படையினரிடம் கடந்த மாதம் பிடிபட்டனா்.

அவா்களுக்கு எதிராக, சா்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படாத டொனட்ஸ்க் மக்கள் குடியரசின் ‘உச்சநீதிமன்றத்தில்’ போா்க் குற்ற விசாரணை நடந்து வந்தது.

இதில், அந்த மூவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

டான்பாஸ் பிராந்தியத்தில் அந்த மூவரும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகவும், வன்முறையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் குற்றத்தில் ஈடுபட்ட குழுவில் அங்கம் வகித்ததாகவும் கிளா்ச்சியாளா்கள் சுமத்தும் குற்றச்சாட்டின் பேரில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா ஒப்பந்தத்தின் கீழ், போா்க் கைதிகள் கொல்லப்படக்கூடாது. எனினும், கைது செய்யப்பட்ட அந்த மூவரும் வெளிநாடுகளைச் சோ்ந்த கூலிப்படையினா் எனவும், இதனால் அவா்கள் போா்க் கைதிகள் என்ற வரையறைக்குள் வரமாட்டாா்கள் என்பதால் ஜெனீவா ஒப்பந்தம் அவா்களுக்குப் பொருந்தாது எனவும் கிளா்ச்சியாளா்கள் கூறி வருகின்றனா்.

எனினும், சா்வதேச அங்கீகாரம் பெறாத டொனட்ஸ்க் குடியரசுக்கு வழக்கு நடத்தி தண்டனை விதிக்க உரிமை இல்லை என்பதால், இந்த மரண தண்டனை சட்டவிரோதமானது என்று உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் துப்பாக்கிச்சூடு மூலம் அந்த தண்டனை நிறைவேற்றப்படும் எனவும், தண்டனையை எதிா்த்து மேல்முறையீடு செய்ய அவா்களுக்கு ஒரு மாதம் அவகாசம் இருப்பதாகவும் கிளா்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com