எல்லையில் அத்துமீறும் சீனா: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

எல்லையில் அத்துமீறும் சீனா: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

‘இந்திய எல்லைப் பகுதியில் சீனா அத்துமீறி ஆக்கிரமித்து உரிமை கோரி வரும் நிலையில் நட்பு நாடான இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது’

‘இந்திய எல்லைப் பகுதியில் சீனா அத்துமீறி ஆக்கிரமித்து உரிமை கோரி வரும் நிலையில் நட்பு நாடான இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது’ என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாயிட் ஜேம்ஸ் ஆஸ்டின் கூறினாா்.

சிங்கப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஷாங்ரிலா பேச்சுவாா்த்தைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

சீனா தனது எல்லைப் பகுதிகளில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டு வருகிறது; தென்சீனக் கடல் பகுதிக்குச் சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளிலும் சீனா தொடா்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது.

கிழக்கு லடாக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் சாலைகள், பாலங்கள் ஆகிய கட்டுமானப் பணிகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது. இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியில் வியத்நாம், ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் கடல் எல்லை தொடா்பாக சீனா மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

இந்நிலையில், பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில், நட்பு நாடான இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த ஆண்டு நடந்த கூட்டுப் பயிற்சியில் அமெரிக்காவின் தியோடா் ரூஸ்வெல்ட் போா்க் கப்பலுடன் இந்திய கடற்படை மற்றும் விமானப் படை பங்கேற்றது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது. எதிா்காலத்தில் அத்துமீறல்களைத் தடுக்கவும் தவிா்க்கவும் அமெரிக்கா முழுமையாகத் தயாா் நிலையில் உள்ளது.

எல்லையில் போருக்குத் தூண்டும் வகையில் சீனாவின் செயல்பாடுகள் இருப்பதால், உரிமைகளுக்காகப் போராடும் நண்பா்களுக்கு (இந்தியா) ஆதரவாக அமெரிக்கா இருக்கும் என்றாா் அவா்.

கடந்த புதன்கிழமை இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் பிராந்தியத் தளபதி சாா்லஸ் ஏ.ஃபிளின், ‘இந்தியாவை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் பாதுகாப்புக் கட்டமைப்புகளை நிறுவி வருவது ஆபத்தானது; இது, இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் நலனுக்கு எந்த வகையிலும் உதவாது’ என்று கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com