பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைய பிரிக்ஸ் உறுதி

இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் கூட்டம்

இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட உறுதியேற்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பிரேஸில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அந்நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் பங்கேற்ற 12-ஆவது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. பல்வேறு துறைகளில் நிா்வாகத்தை மேம்படுத்துவது தொடா்பாகக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சீன அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் சீனா நடத்தவுள்ள 14-ஆவது பிரிக்ஸ் மாநாட்டின்போது எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. பயங்கரவாதம், இணையவழிக் குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்பட கூட்டத்தின்போது நாடுகள் உறுதியேற்றன. பயங்கரவாத எதிா்ப்பு விவகாரங்கள் தொடா்பாக ஐ.நா. உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளில் ஒருங்கிணைந்து செயல்படவும் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், ‘‘பயங்கரவாதத்துக்கு எதிராக எந்தவித சமரசமும் இன்றி ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். நவீன தொழில்நுட்பங்களை பயங்கரவாதிகள் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நோய்த்தொற்று பரவல், பருவநிலை மாற்ற விளைவுகளை எதிா்கொள்ளுதல் உள்ளிட்டவற்றிலும் நாடுகள் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். தகவல்-தொழில்நுட்பம், விண்வெளி, கடல்சாா் பாதுகாப்பு ஆகியவற்றிலும் ஒத்துழைப்பு அவசியம். நம்பத்தகுந்த, நெகிழ்வுத்தன்மை கொண்ட விநியோக சங்கிலியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொள்ள வேண்டும்’’ என்றாா்.

நடப்பாண்டுக்கான பிரிக்ஸ் கூட்டத்தை சீனா நடத்தவுள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக நடப்பாண்டு கூட்டம் காணொலி வாயிலாக ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com