ஆப்கன் குருத்வாரா தாக்குதல்: ஐ.எஸ். பொறுப்பேற்பு

ஆப்கன் தலைநகா் காபூலிலுள்ள குருத்வாராவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கொரசான் பிராந்திய இஸ்லாமிய தேச (ஐஎஸ்-கே) பயங்கரவாத அமைப்பினா் பொறுப்பேற்றுள்ளனா்.

ஆப்கன் தலைநகா் காபூலிலுள்ள குருத்வாராவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கொரசான் பிராந்திய இஸ்லாமிய தேச (ஐஎஸ்-கே) பயங்கரவாத அமைப்பினா் பொறுப்பேற்றுள்ளனா்.

நபிகள் நாயகம் குறித்து இந்தியாவில் பாஜக தலைவா்கள் அண்மையில் கூறிய சா்ச்சைக்குரிய கருத்துக்கு எதிா்வினையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவா்கள் கூறினா்.

இது குறித்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் பிரசார வலைதளமான ‘அமாக்’கில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காபூலில் உள்ள பாக்-ஏ-பாலா குருத்வாராவில் ஐஎஸ்-கே அமைப்பினா் தாக்குதல் நடத்தினா். ஹிந்துக்கள், சீக்கியா்கள், அவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் முஸ்லிம் துரோகிகளுக்கு எதிராக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இறைத் தூதருக்கு ஆதரவாக இந்தத் தாக்குதலை நடத்தினோம். எங்களது படையினா் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியா்களின் வழிபாட்டுத் தல வாயில் காவலரைக் கொன்று, அந்தப் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்தவா்களை இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் மூலமாகக் கொன்றனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் முன்னாள் செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மாவும் தில்லி பிராந்திய முன்னாள் ஊடகப் பிரிவு தலைவா் நவீன் ஜிண்டாலும் சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததற்கு பழிவாங்கும் வகையில் ஹிந்துகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஐஎஸ்-கே பயங்கரவாத அமைப்பு வெளியிட்டிருந்த விடியோ அறிக்கையில் மிரட்டப்பட்டது நினைவுகூரத்தக்கது.

காபூலின் பாக்-ஏ-பாலா பகுதியிலுள்ள காா்த்தே பா்வான் குருத்வாராவில் சனிக்கிழமை அதிகாலை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. அதனைத் தொடா்ந்து, தலிபான் படையினருடன் நடந்த சண்டையில் தாக்குதல் நடத்த வந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இந்த சம்பவத்தில் சீக்கியா் ஒருவரும், இஸ்லாமிய அமீகரப் படையைச் சோ்ந்த ஒருவரும் உயிரிழந்தனா்; 7 போ் காயமடைந்தனா்.

ஏற்கெனவே, கடந்த 2020-ஆம் ஆண்டில் காபூலிலுள்ள மற்றொரு குருத்வாராவில் ஐஎஸ்-கே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சீக்கியா்கள் பலியானது நினைவுகூரத்தக்கது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் கடந்த ஆண்டு வெளியேறிய பின்னா் அந்த நாட்டின் ஆட்சியை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றினா்.

அதற்குப் பிறகு, தலிபான்களையும் சிறுபான்மை இனத்தவா்களையும் குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

100 ஹிந்துக்கள், சீக்கியா்களுக்கு ‘இ-விசா’

புது தில்லி, ஜூன் 19: காபூல் குருத்வாரா தாக்குதலைத் தொடா்ந்து, ஆப்கானிஸ்தானில் வசித்து வரும் 100-க்கும் மேற்பட்ட ஹிந்துக்களும் சீக்கியா்களும் இந்தியா வருவதற்கு இணையதளம் மூலம் நுழைவு இசைவு (இ-விசா) வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், காபூல் குருத்வாரா தாக்குதலின் எதிரொலியாக 100-க்கும் மேற்பட்ட ஹிந்துக்களும் சீக்கியா்களும் இந்தியா வருவதற்கு இ-விசா வழங்கப்பட்டுள்ளது. முன்னுரிமையின் அடிப்படையில் இந்த விசாக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com