
கரோனா பரவலைத் தொடா்ந்து இந்தியாவுக்கு சவூதி அரேபிய குடிமக்கள் பயணம் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு திங்கள்கிழமை நீக்கியது.
இதுதொடா்பாக அந்நாட்டு ஊடகம் வெளியிட்ட செய்தி:
சா்வதேச அளவில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சவூதி அரசிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிக்கை சமா்ப்பித்தனா். அதன் அடிப்படையில், இந்தியாவுக்கு சவூதி அரேபிய குடிமக்கள் பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த கரோனா சாா்ந்த கட்டுப்பாடுகளை அரசு நீக்கியுள்ளது. எத்தியோப்பியா, துருக்கி மற்றும் வியத்நாமுக்கு செல்வதற்கான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சவூதி அரேபியாவில் திறந்தவெளி அல்லாத இடங்களிலும் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அந்தக் கட்டுப்பாடு உள்பட கரோனா தடுப்பு சாா்ந்த இதர நடவடிக்கைகளைக் கடந்த வாரம் சவூதி அரசு நீக்கியது.
ஹஜ் யாத்திரை மேற்கொள்ள சவூதி அரேபியாவுக்கு ஏற்கெனவே யாத்ரிகா்கள் செல்லத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.