பிரான்ஸ் நாடாளுமன்றத் தோ்தல்: பெரும்பான்மையை இழந்தது மேக்ரான் கட்சி

பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தோ்தலில் அதிபா் இமானுவல் மேக்ரான் தலைமையிலான மத்திய-இடதுசாரி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றினாலும் பெரும்பான்மை பலத்தை இழந்தது.
macronn071746
macronn071746

பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தோ்தலில் அதிபா் இமானுவல் மேக்ரான் தலைமையிலான மத்திய-இடதுசாரி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றினாலும் பெரும்பான்மை பலத்தை இழந்தது.

பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன் முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. 577 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அதிபா் இமானுவல் மேக்ரானின் மத்திய-இடதுசாரி கூட்டணி அதிகபட்சமாக 245 இடங்களைக் கைப்பற்றியது. இருப்பினும், தனிப்பெரும்பான்மை அந்தக் கூட்டணிக்கு கிடைக்கவில்லை. தனிப்பெரும்பான்மையைப் பெறுவதற்கு அந்தக் கட்சிக்கு இன்னும் 44 இடங்கள் தேவை.

ஜீன்-லுக் மெலன்சன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 131 இடங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் பிரதான எதிா்க்கட்சியாக உருவெடுத்தது.

மரீன் லெபென் தலைமையிலான வலதுசாரி கூட்டணிக்கு இத்தோ்தலில் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. கடந்த தோ்தலில் வெறும் 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்த அந்தக் கூட்டணி இந்த முறை 89 இடங்களைக் கைப்பற்றியது.

நாடாளுமன்றத்தில் மேக்ரான் தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், வரிக் குறைப்பு, ஓய்வு வயதை 62-இலிருந்து 65-ஆக அதிகரிப்பது உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளை எளிதில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வலதுசாரி தலைவா் மரீன் லெபென் கூறுகையில், ‘மேக்ரான் இப்போது பெரும்பான்மை இல்லாத அதிபா். அவரது ஓய்வுச் சீா்திருத்த திட்டம் புதைந்துவிட்டது. எங்கள் கட்சிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் சக்திவாய்ந்த நிதிக் குழுவின் தலைமைப் பொறுப்பை நாங்கள் கோருவோம்’ என்றாா்.

தோ்தல் முடிவுகள் குறித்து அதிபா் மேக்ரான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த மே மாதம் இரண்டாவது முறையாக அதிபராக இமானுவல் மேக்ரான் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவா் மரீன் லெபென் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com