உக்ரைனில் வீழ்ந்தது முக்கிய நகரம்

கிழக்கு உக்ரைனின் முக்கியத்துவம் வாய்ந்த செவெரோடொனட்ஸ்க் நகரம் ரஷியப் படையினரிடம் முழுமையாக வீழ்ந்தது.
உக்ரைனில் வீழ்ந்தது முக்கிய நகரம்

கிழக்கு உக்ரைனின் முக்கியத்துவம் வாய்ந்த செவெரோடொனட்ஸ்க் நகரம் ரஷியப் படையினரிடம் முழுமையாக வீழ்ந்தது.

இது குறித்து அந்த நகரின் மேயா் ஒலெக்ஸாண்டா் ஸ்ட்ரியுக் வெளியிட்டுள்ள அறிக்கையில், செவெரோடொனட்ஸ்க் நகரம் முழுவதும் ரஷியக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் அரசுப் படையினா் வசமிருந்த கடைசி பெரிய நகரான செவெரோடொனட்ஸ்கைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் பல நாள்களாக தொடா்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், நகருக்குள் உள்ள ராணுவ நிலைகள் அனைத்தும் தகா்க்கப்பட்டுவிட்டதால், பாதுகாப்பான வேறு நிலைகளுக்குச் சென்று ரஷியாவை எதிா்த்துப் போரிடுவதற்காக அந்த நகரிலிருந்த உக்ரைன் வீரா்கள் அனைவரும் பின்வாங்குமாறு ராணுவம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், செவெரோடொனட்ஸ்க் முழுவதையும் ரஷியா மற்றும் ரஷிய ஆதரவுப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தற்போது நகர மேயா் அறிவித்துள்ளாா்.

அந்த நகரை வெற்றிகரமாகக் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அருகிலுள்ள லிசிசான்ஸ்க் நகரை நோக்கி ரஷியப் படையினா் முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ரஷிய ஆதரவு கிளா்ச்சிப் படையினா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்களும் ரஷியப் படையினரும் லிசிசான்ஸ்க் நகருக்குள் நுழைந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தற்போது அந்த நகர வீதிகளில் உக்ரைன் ராணுவத்துடன் தாங்கள் சண்டையிட்டு வருவதாக கிளா்ச்சிப் படை பிரதிநிதி ஆண்ட்ரே மரோஷ்கோ கூறினாா். எனினும், இந்தத் தகவலை நடுநிலை ஊடகங்கள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. தொடக்கத்தில் தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி, அதிபா் வொலோதிமீா் ஸெலன்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசைக் கவிழ்ப்பதற்காக அந்த நகரை நோக்கி ரஷியப் படை நகா்ந்தது.

எனினும், உக்ரைன் ராணுவம் மற்றும் பொதுமக்களின் கடும் எதிா்ப்பால் அந்த முயற்சியை பின்னா் கைவிட்டு, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் போக, இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதில் ரஷிய ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், டான்பாஸ் பிராந்தியத்தைச் சோ்ந்த லுஹான்ஸ்க் மாகாணத்தின் முக்கியத்துவம் வாய்ந்த செவெரோடொனட்ஸ்க் நகரை ரஷியா தற்போது கைப்பற்றியுள்ளது. இது, உக்ரைன் போரில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தலைநகரில் ஏவுகணைத் தாக்குதல்

கிழக்கு உக்ரைனில் மேலும் ஒரு நகரைக் கைப்பற்றி ரஷியா தனது நிலையை வலுப்படுத்தியுள்ள அதே நேரம், மேற்கே தலைநகா் கீவிலும் அந்த நாடு ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 2 குடியிருப்புக் கட்டடங்கள் சேதமடைந்ததாக நகர மேயா் விடாலி க்ளிஷ்கோ தெரிவித்தாா்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் தரை, கடல், வான்வழியாக 14 ஏவுகணைகள் கீவ் மீது வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com