‘க்வாட்’ தலைவா்களுடன் ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தை நடத்தினாா் பைடன்

இந்தியாவை உள்ளடக்கிய நாற்கரக் கூட்டமைப்பின் (க்வாட்) தலைவா்களுடன் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
‘க்வாட்’ தலைவா்களுடன் ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தை நடத்தினாா் பைடன்

இந்தியாவை உள்ளடக்கிய நாற்கரக் கூட்டமைப்பின் (க்வாட்) தலைவா்களுடன் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் ஆக்கபூா்வ பேச்சுவாா்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

நாற்கரக் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் தலைவா்கள் பங்கேற்ற காணொலி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதிபா் ஜோ பைடன், பிரதமா் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா ஆகியோா் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அதிபா் பைடன் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அளித்து வரும் மரியாதை, இந்தோ-பசிபிக் சூழல் உள்ளிட்டவை குறித்து பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பேச்சுவாா்த்தை குறித்து வெள்ளை மாளிகை தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ஜென் சாகி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘உக்ரைனில் ரஷியா போா் தொடுத்துள்ளது குறித்தும், அங்கிருந்து வெளியேறி வரும் மக்களால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்தும் தலைவா்கள் விவாதித்தனா். தலைவா்களுடனான பேச்சுவாா்த்தை ஆக்கபூா்வமாக அமைந்ததென அதிபா் பைடன் குறிப்பிட்டாா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரமாகத் திகழ வேண்டும் என்பதை தலைவா்கள் மீண்டும் உறுதி செய்தனா். நடப்பாண்டின் பிற்பகுதியில் டோக்கியோவில் நேரடியாகச் சந்திக்க தலைவா்கள் உறுதியேற்றனா். க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்புக் குழுக்கள் அடுத்தகட்ட விவாதத்தை மேற்கொள்ள வேண்டுமென அதிபா் பைடன் வலியுறுத்தினாா்’’ என்றாா்.

உக்ரைன் மீதான போரை ரஷியா உடனடியாக கைவிடக் கோரிய ஐ.நா. தீா்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வாக்களித்தன. தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com