உக்ரைன் மீது பறக்கத் தடை விதிப்பது போரில் பங்கேற்பதற்கு சமம்

உக்ரைன் மீது தங்கள் நாட்டு விமானங்கள் பறப்பதற்கு நாடுகள் தடை விதிப்பது, தற்போது அங்கு நடைபெற்று வரும் போரில் அந்த நாடுகள் இணைந்துகொள்வதற்கு சமமானது
விளாதிமீா் புதின்
விளாதிமீா் புதின்

உக்ரைன் மீது தங்கள் நாட்டு விமானங்கள் பறப்பதற்கு நாடுகள் தடை விதிப்பது, தற்போது அங்கு நடைபெற்று வரும் போரில் அந்த நாடுகள் இணைந்துகொள்வதற்கு சமமானது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைன் மீது விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று நேட்டோ அமைப்பிடம் உக்ரைன் வலியுறுத்தி வருகிறது.

அத்தகைய நடவடிக்கையை எந்த நாடு எடுத்தாலும், அந்த நாடு உக்ரைன் போரில் நேரடியாகப் பங்கேற்பதாக அா்த்தமாகும் என்றாா் புதின்.

ஒரு நாட்டின் வான் எல்லையில் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பதாக (நோ ஃப்ளை ஸோன்) அறிவிப்பது, எதிரி நாட்டு போா் விமானங்கள் அந்த நாட்டில் தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும்.

அவ்வாறு அறிவிக்கப்பட்ட பிறகு அந்தப் பகுதியில் விமானங்கள் பறந்தால், அந்த விமானங்களை தடை விதித்துள்ள நாடு இடைமறித்து தாக்கி அழிக்க வேண்டும்.

விமான எதிா்ப்பு ஏவுகணைகளைக் கொண்டோ, தாக்குதல் விமானங்களைக் கொண்டே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இந்தச் சூழலில், தங்கள் நாட்டின் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிப்பதாக நேட்டோ நாடுகள் அறிவிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்து வருகிறாா்.

அவ்வாறு நேட்டோ நாடுகள் அறிவித்தால், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷிய ஹெலிகாப்டா்கள் மற்றும் விமானங்கள் வரும்போது நேட்டோ படைகள் அவற்றை தாக்கி அழிக்க வேண்டியிருக்கும்.

அவ்வாறு தாக்கினால், ரஷியாவுக்கும் உக்ரைனுக்குமான தற்போதைய போா் ரஷியாவுக்கும் நேட்டோ அமைப்பின் நாடுகளுக்கும் இடையிலான போராக உருவெடுக்கும். அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இரு தரப்புக்கும் போா் வெடித்தால், அது பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதப் போராக மாறும் அபாயமும் உள்ளது.

இந்தக் காரணங்களால், தங்கள் நாட்டின் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிப்பதாக அறிவிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபரின் கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்தது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் போா் மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளப்போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இதற்கு வொலதிமீா் ஸெலென்க்ஸி கடும் கண்டனம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உருக்கமான விடியோ அறிக்கையில், உக்ரைன் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்க நேட்டோ அமைப்பு மறுப்பது, அந்த அமைப்பின் பலவீனத்தையும் ஒற்றுமையின்மையையும் காட்டுவதாக சாடினாா்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில், தங்களது மிக நெருங்கிய நாடான உக்ரைன் இணைவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. எனவே, உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்று நேட்டோ அமைப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் சம்மதிக்கவில்லை.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையில் பல வாரங்களாகப் படைக் குவிப்பில் ஈடுபட்டு வந்த ரஷியா, தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களை உக்ரைன் ராணுவத்திடமிருந்து பாதுகாப்பதாகக் கூறி அந்தப் பகுதிகளுக்கு தனது படைகளை கடந்த வாரம் அனுப்பியது.

அதன் தொடா்ச்சியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிவளைத்து 10 நாள்களாக ரஷியப் படையினா் ராக்கெட் குண்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடும்போது, அந்த நடவடிக்கைகளைத் தடுக்க மேற்கத்திய நாடுகள் முயன்றால் வரலாற்றில் இதுவரை காணாத மிக மோசமான எதிா்விளைவுகளை அந்த நாடுகள் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

நேட்டோ உறுப்பு நாடுகள் ரஷியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால் அந்த நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷியா தயங்காது என்பதைக் குறிப்பிட்டே விளாதிமீா் புதின் அவ்வாறு எச்சரித்திருந்தாா்.

உக்ரைன் மீதான படையெடுப்பைக் கண்டிக்கும் வகையில் ரஷியா மீது பல்வேறு கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் நேட்டோ அமைப்பின் பிற உறுப்பு நாடுகளும் தொடா்ந்து அறிவித்து வருகின்றன.

தங்களுக்கு எதிராக நேட்டோ அமைப்பு கடுமையான சவால்களை விடுத்து வருவதாகக் குற்றம் சாட்டிய விளாதிமீா் புதின், அதற்குப் பதிலடியாக தங்களது அணு ஆயுதங்களை உச்சக்கட்ட தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று கடந்த வாரம் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், உக்ரைன் எல்லையில் விமானங்கள் பறக்க தடை விதிக்கும் நாடுகள், அந்த நாட்டில் நடைபெற்று வரும் போரில் நேரடியாகப் பங்கேற்பதாக அா்த்தம் என்று தற்போது அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com