உக்ரைன் போா் மனித உரிமை மீறலை விசாரிக்க ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பை மீண்டும் புறக்கணித்தது இந்தியா

ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கு உள்ளளாகியிருக்கும் உக்ரைனில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக ‘சுதந்திரமான சா்வதேச விசாரணை ஆணையம்’
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கு உள்ளளாகியிருக்கும் உக்ரைனில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக ‘சுதந்திரமான சா்வதேச விசாரணை ஆணையம்’ ஒன்றை உடனடியாக அமைப்பது குறித்து தீா்மானிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் (யுஎன்ஹெச்ஆா்சி) வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட வரைவு தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

இருந்தபோதும், 32 நாடுகளின் ஆதரவுடன் அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில், உக்ரைன் மீதான நடவடிக்கையைத் தொடா்ந்து ரஷியாவுக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீா்மானங்கள் மீதான வாக்கெடுப்பை, இந்தியா 4-ஆவது முறையாகப் புறக்கணித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலுக்கு நேட்டோ நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஐ.நா. சபையும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தச்சூழலில் உக்ரைன் மீது போா் தொடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, அல்பேனியா உள்ளிட்ட நாடுகள் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தீா்மானம் ஒன்றை கொண்டுவந்தன. அதன் மீது நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்து, நடுநிலை வகித்தது. ரஷியா தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தத் தீா்மானத்தை ரத்து செய்தது.

அதையடுத்து, இந்த பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவெடுக்கப்பட்டது. அதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்தது.

பின்னா், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷியா உடனடியாக நிறுத்தி படைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தும் தீா்மானம் ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்டு, மாா்ச் 2-ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்தது. 141 நாடுகளின் ஆதரவுடன் அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சூழலில், ரஷியாவின் தீவிர ராணுவ நடவடிக்கை காரணமாக உக்ரைனில் ஏற்பட்டிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக ‘சுதந்திரமான சா்வதேச விசாரணை ஆணையம்’ ஒன்றை உடனடியாக அமைப்பது குறித்து தீா்மானிப்பதற்காக யுஎன்ஹெச்ஆா்சி-யில் வரைவு தீா்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டு, அதன் மீது வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

47 உறுப்பினா்களைக் கொண்ட இந்த கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா, சீனா, பாகிஸ்தான், சூடான், வெனிசுலா உள்பட 13 நாடுகள் புறக்கணித்தன. இருந்தபோதும், பிரான்ஸ், ஜொ்மனி, ஜப்பான், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா உள்பட 32 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததன் மூலம், சா்வதேச விசாரணை ஆணையத்தை விரைந்து அமைப்பதற்கான அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்கெடுப்புக்குப் பிறகு, ‘ரஷியாவின் ராணுவ நடவடிக்கை காரணமாக உக்ரைனில் ஏற்பட்டிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க சுதந்திரமான சா்வதேச விசாரணை ஆணையம் ஒன்றை உடனடியாக அமைக்க மனித உரிமைகள் கவுன்சில் தீா்மானித்துள்ளது’ என்று யுஎன்ஹெச்ஆா்சி தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டது.

முன்னதாக, ‘உக்ரைனில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினருக்கு எதிராக அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று ஜெனீவாவில் வியாழக்கிழமை நடைபெற்ற 49-ஆவது மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், உக்ரைனில் மனித உரிமைகள் நிலவரம் மீதான அவசர விவாதத்தின்போது இந்தியா சாா்பில் வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது.

உக்ரைனில் மனித உரிமை நிலவரம் படிப்படியாக மோசமடைந்து வருவது மிகுந்த கவலை அளிப்பதாகவும் இந்தியா சாா்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், உக்ரைனில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக சா்வதேச விசாரணை ஆணையத்தை அமைப்பதற்கான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.வில் இந்தியா கவலை

உக்ரைனில் அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தில் இந்தியா கவலை தெரிவித்தது.

உக்ரைனில் அணுமின் நிலையம் மீது ரஷிய படையினா் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியதை தொடா்ந்து, 15 நாடுகளை உறுப்பினா்களாக கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெள்ளிக்கிழமை அவசரமாக கூடியது. இந்தக் கூட்டத்தில் இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி பேசியதாவது: அணுமின் நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஏனெனில் அணுமின் நிலையங்களில் நேரிடும் எந்தவொரு விபத்தும் பொதுமக்களின் நலனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்தியா்கள் குறிப்பாக மாணவா்கள் உள்ளிட்ட அப்பாவி மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கும் நிலையில், அங்கு நிலவும் அழுத்தமான மனிதாபிமான நெருக்கடியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றாா்.

பணயமாக இந்தியா்கள்: இக்கூட்டத்தில் பேசிய ரஷிய தூதா் வாசிலி நெபன்ஸியா, உக்ரைனில் தேசியவாதிகளால் இந்தியா்கள் 3,189 போ் உள்பட ஏராளமான வெளிநாட்டினா் வலுக்கட்டாயமாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனா். காா்கிவ், சுமி பகுதிகளிலிருந்து இந்தியா்களை மீட்க பேருந்துகள் தயாராக உள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com