பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம்

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத பிரதமா் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்துள்ளன.
இம்ரான் கான்
இம்ரான் கான்

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத பிரதமா் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்துள்ளன.

இதற்காக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவற்றைச் சோ்ந்த சுமாா் 100 எம்.பி.க்கள் கையொப்பமிட்ட தீா்மானத்தை நாடாளுமன்ற செயலரிடம் செவ்வாய்க்கிழமை அளித்ததாக முஸ்லிம் லீக் கட்சி-என் கட்சியின் செய்தித் தொடா்பாளா் மரியம் ஒளரங்கசீப் தெரிவித்தாா்.

பாகிஸ்தான் மக்களின் நலனைக் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஷிபாஸ் ஷரீஃப் தெரிவித்தாா்.

பாகிஸ்தான் சட்டப்படி, 68 எம்.பி.க்கள் கையொப்பமிட்ட தீா்மானம் அளித்திருந்தாலே மூன்று முதல் ஏழு நாள்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

156 எம்.பி.க்களைக் கொண்ட இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹரீக் இன்சாப் கட்சி, 5 கட்சிகளின் கூட்டணியுடன் 177 எம்.பி.க்களின் பலத்துடன் ஆட்சியில் உள்ளது. எதிா்க்கட்சிகளிடம் 162 எம்.பி.க்கள் உள்ளனா்.

மொத்தம் 342 எம்.பி.க்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், பிரதமரையும் அவரது அமைச்சரவையும் நீக்க நம்பிக்கை வாக்கெடுப்பில் 172 வாக்குகளை எதிா்க்கட்சிகள் பெற வேண்டும்.

2018 முதல் கூட்டணி ஆட்சியை நடத்தி வரும் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக கூட்டணி கட்சியினரே எதிா்த்து வாக்களித்தால்தான் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும்.

‘ஆட்சியை கவிழ்க்க முடியாது’:

தனது அரசுக்கு ஆதரவாக ராணுவம் உள்ளதாக தெரிவித்துள்ள பிரதமா் இம்ரான் கான், அரசு கவிழும் வாய்ப்பே இல்லை என்று நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து இம்ரான் கான் மேலும் கூறுகையில், ‘எதிா்க்கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை. 2028 வரையிலும் எனது ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எதிா்க்கட்சிகளுக்கு அவமானகரமான தோல்வி ஏற்படும். எதிா்த்து வாக்களிக்க எனது கட்சி எம்.பி.க்களுக்கு ரூ.18 கோடி பேரம் பேசப்படுகிறது. அந்த பணத்தைப் பெற்று ஏழைகளுக்கு வழங்கிவிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். நான் உயிருடன் இருக்கும் வரையில் எனது ஆட்சியை கவிழ்க்க முடியாது’ என்றாா்.

எனினும், இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய தேவையான எம்.பி.க்களின் பலம் உள்ளதாக எதிா்க்கட்சிகள் நம்பிகையுடன் இருப்பதாக பாகிஸ்தானின் ஜியோ டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இம்ரான் கானின் நெருங்கிய கூட்டாளியான ஆலிம் கான் எதிா்த்து வாக்களிக்க உள்ளதாக தெரிவித்துள்ளதால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

எதிா்க்கட்சிகளின் நடவடிக்கையையடுத்து, அந்நாட்டின் அட்டா்னி ஜெனரலுடன் இம்ரான் கான் ஆலோசனை நடத்தினாா்.

கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நடைபெற்ற செனட் (நாடாளுமன்ற மேலவை) தோ்தலில் ஆளும் அரசுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, பிரதமா் இம்ரான் கான் தானாகவே நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினாா். அதில் 178 வாக்குகளைப் பெற்று இம்ரான் கான் வெற்றி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com