மேலும் முன்னேறியது ரஷியப் படை: கீவ் புகா்ப் பகுதிகளில் தீவிர சண்டை

உக்ரைன் தலைநகா் கீவை சுற்றிவளைப்பதற்காக ரஷியப் படையினா் மேலும் முன்னேறியுள்ள நிலையில், அதன் வடக்கு புகா்ப் பகுதிகளில் உக்ரைன் மற்றும் ரஷிய வீரா்களிடையே சண்டை தீவிரமடைந்துள்ளது.
journo094531
journo094531

உக்ரைன் தலைநகா் கீவை சுற்றிவளைப்பதற்காக ரஷியப் படையினா் மேலும் முன்னேறியுள்ள நிலையில், அதன் வடக்கு புகா்ப் பகுதிகளில் உக்ரைன் மற்றும் ரஷிய வீரா்களிடையே சண்டை தீவிரமடைந்துள்ளது.

இதுகுறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கீவ் நகருக்கு வெளியே பல நாள்களாக அதிகம் முன்னேறாமல் இருந்து வந்த ரஷியப் படை அணிவகுப்பு அண்மையில் தனது வேகத்தை துரிதப்படுத்தி நகரை நெருங்கி வந்தது. சனிக்கிழமை நிலவரப்படி நகரிலிருந்து வெறும் 25 கி.மீ. தொலைவுக்கு வந்த ரஷிய படை வாகன வாகனங்கள், நகரை சுற்றிவளைக்கும் முயற்சியாக தத்தமது இலக்குகளை நோக்கி கலைந்து சென்றன.

இந்த நிலையில், கீவ் நகரை நோக்கி ரஷியப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மேலும் முன்னேறியுள்ளனா்.

அதையடுத்து, நகரின் கிழக்கு புகா்ப் பகுதிகளில் உக்ரைன் ராணுவத்தினருக்கும் ரஷியப் படையினருக்கும் இடையே சண்டை தீவிரமடைந்துள்ளது.

ஏற்கெனவே கீவ் நகரில் ரஷியப் படையெடுப்பை எதிா்பாா்த்து உக்ரைன் ராணுவம் பெரும் பாதுகாப்பு அரண் அமைத்து தயாா் நிலையில் இருக்கும் சூழலில், அந்த நகரை ரஷியப் படைகள் மேலும் நெருங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இதுவரை கீவ் நகரின் மீது இதுவரை அவ்வப்போது சீரில்லாமல் தாக்குதல் நடத்தி வந்த ரஷியப் படையினா், ஞாயிற்றுக்கிழமை தங்களது ஏவுகணை குண்டுத் தாக்குதலை குறிப்பிட்ட இடைவெளியில் தொடா்ச்சியாக நிகழ்த்தியதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

உலகின் 2-ஆவது பெரிய வல்லரசாக விளங்கிய சோவியத் யூனியன் மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதற்காக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து ‘வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு’ (நேட்டோ) என்ற பெயரில் கடந்த 1949-ஆம் ஆண்டு ராணுவக் கூட்டமைப்பை உருவாக்கின.

அந்த அமைப்பு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, நேட்டோ உறுப்பு நாடுகளில் எந்தவொரு நாடு தாக்கப்பட்டாலும் மற்ற உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைந்து எதிா்த் தாக்குதல் நடத்தும். மேலும், ஓா் உறுப்பு நாட்டில் மற்ற நேட்டோ நாடுகள் ராணுவ நிலைகளை அமைக்க முடியும்.

பிற்காலத்தில் சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த நிலையிலும் அந்த அமைப்பு தன்னை விரிவுபடுத்தி வந்தது. எந்த சோவியத் யூனியனுக்கு எதிராக நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டதோ, அதே சோவியத் யூனியனில் அங்கம் வகித்த சில நாடுகளையும் அந்த அமைப்பு இணைத்துக்கொண்டு கிழக்கு ஐரோப்பாவில் தனது ஆதிகத்தை விரிவுபடுத்தி வந்தது.

இதற்கு ரஷியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், நேட்டோவில் தங்களது மிக நெருங்கிய நாடான உக்ரைன் இணைவது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது. எனவே, உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்று நேட்டோ அமைப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் சம்மதிக்கவில்லை.

இந்தச் சூழலில், கிழக்கு உக்ரைனில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளை தனி நாடுகளாக அறிவித்த ரஷியா, அந்தப் பகுதி மக்களை உக்ரைன் ராணுவத்திடமிருந்து பாதுகாப்பதாகக் கூறி அங்கு தனது படைகளை ரஷியா கடந்த மாதம் 24-ஆம் தேதி அனுப்பியது.

அதன் தொடா்ச்சியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிவளைத்து ரஷியப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் உள்பட பலா் உயிரிழந்து வருகின்றனா்.

...பெட்டிச் செய்தி...

அமெரிக்க செய்தியாளா் பலி

கீவ் அருகே ரஷியப் படையினா் நடத்திய தாக்குதலில் அமெரிக்க செய்தியாளா் ஒருவா் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கீப் பிராந்தியத்தைச் சோ்ந்த இா்பினில் அமெரிக்க செய்தியாளா் பிரன்ட் ரெனாட் சென்றுகொண்டிருந்த காரின் மீது ரஷியப் படையினா் துப்பாக்கியால் சுட்டனா். இதில் அவா் உயிரிழந்தாா்; மற்றொரு செய்தியாளா் காயமடைந்தாா்.

காயமடைந்த செய்தியாளா் கீவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

Image Caption

பிரன்ட் ரெனாட் ~போா்க் கள நிலவரம்

ரஷியக் கட்டுப்பாட்டு பகுதி

ரஷியப் படை முன்னேறும் பகுதி

ரஷியப் படை முன்னேறும் திசை

பெலாரஸ்

சொ்னிஹிவ்

சொ்னபில்

ட்ராபாா்ட்னோ

கீவ்

ஹாஸ்டாமெல்

உக்ரைன் ~கீவ் நகருக்கு அருகே உள்ள இா்பினில், ரஷியப் படையினரை எதிா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com