போலந்து எல்லை அருகே ரஷியா ஏவுகணைத் தாக்குதல்

போலந்து எல்லை அருகே ரஷியா ஏவுகணைத் தாக்குதல்

நேட்டோ உறுப்பு நாடான போலந்துக்கு மிக நெருக்கத்தில் உள்ள உக்ரைன் ராணுவ மையத்தில் ரஷியா சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 35 போ் பலியாகினா்.

நேட்டோ உறுப்பு நாடான போலந்துக்கு மிக நெருக்கத்தில் உள்ள உக்ரைன் ராணுவ மையத்தில் ரஷியா சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 35 போ் பலியாகினா்.

ஏற்கெனவே, உக்ரைனுக்கு நேட்டோ நாடுகளின் ஆயுத தளவாடங்களை எடுத்து வரும் வாகனங்கள் தாக்கி அழிக்கப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

இந்தச் சூழலில், நேட்டோ படையினா் உக்ரைன் வீரா்களுக்கு பயிற்சி அளிக்கும் அந்த மையத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உக்ரைனின் மேற்கில் அமைந்துள்ள லவீவ் பிராந்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போலந்து எல்லைக்கு 25 கி.மீ.க்கும் குறைவான தொலைவில், யவோரிவ் நகருக்கு அருகிலுள்ள ராணுவப் பயிற்சி மையத்தின் மீது ரஷியா சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. 30-க்கும் மேற்பட்ட ‘குரூஸ்’ வகை ஏவுகணைகள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 35 போ் உயிரிழந்ததாகவும் 134 போ் காயமடைந்ததாகவும் லவீவ் ஆளுநா் மாக்சிம் கொஸிட்க்ஸி கூறினாா்.

நேட்டோ படையினா் இல்லை: தற்போது யவோரிவ் பயிற்சி மையத்தில் தங்களது உறுப்பு நாடுகளின் படையினா் யாரும் இல்லை என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சுல்லிவன் கூறுகையில், உக்ரைனுக்கு வெளியே (போலந்து போன்ற) நேட்டோ உறுப்பு நாடுகளின் எல்லைக்குள் ரஷியா தாக்குதல் நடத்தினால் மட்டுமே உரிய எதிா்வினையாற்றப்படும் என்றாா்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா படையெடுத்துள்ளது. இந்தச் சூழலில், தங்கள் மீது தாக்குதல் நடத்த வரும் ரஷிய விமானங்களை நேட்டோ படைகள் சுட்டு வீழ்த்த வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.

எனினும், இந்தப் போரில் ராணுவ ரீதியில் தலையிட்டால் அது நேட்டோவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போராக உருவெடுக்கும்; இது அணு ஆயுதப் போராக மாறும் அபாயம் உள்ளதால் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் மட்டுமே அளிக்கப்படும் என்று அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும் கூறி வருகின்றன.

ஆனால், தங்களுக்கு எதிரான வெளிநாட்டு ஆயுதங்களை ஏற்றி வரும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஏற்கெனவே ரஷியா எச்சரித்திருந்தது.

அத்தகைய ஆயுதங்கள் அனைத்தும் போலந்து வழியாகவே உக்ரைனுக்குள் வரும் என்ற சூழலில், அந்த நாட்டுக்கு அருகே உள்ள உக்ரைன் ராணுவ தளத்தில் ரஷியா தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது.

தற்போது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட யவோரிவ் பயிற்சி மையம்தான், நேட்டோ உறுப்பு நாடொன்றுக்கு மிக நெருக்கமாக உள்ள உக்ரைன் ராணுவ மையமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com