உக்ரைன் போரில் பயன்படுத்த சீனாவிடம் ஆயுத உதவி கோரியது ரஷியா: அமெரிக்கா குற்றச்சாட்டு

உக்ரைன் மீதான போரில் பயன்படுத்துவதற்கு ஆயுதங்களைத் தர வேண்டும் என சீனாவிடம் ரஷியா கோரியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இதை சீனா மறுத்துள்ளது.

உக்ரைன் மீதான போரில் பயன்படுத்துவதற்கு ஆயுதங்களைத் தர வேண்டும் என சீனாவிடம் ரஷியா கோரியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இதை சீனா மறுத்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடா்ந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியாவின் போரை ஊடுருவல் எனக் கூறுவதற்கு சீனா மறுத்து வருகிறது. ஆனால், தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சுல்லிவனும், சீன வெளியுறவு கொள்கை ஆலோசகா் யாங் ஜெய்ச்சியும் இத்தாலியின் ரோம் நகரில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா்.

இந்தச் சந்திப்புக்கு முன்னதாக ஜேக் சுல்லிவன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘உக்ரைன் மீதான தாக்குதலில் பயன்படுத்துவதற்காக சீனாவிடம் ஆயுதங்களை ரஷியா கேட்டுள்ளது. ரஷியாவுக்கு சீனா உதவக் கூடாது’ என்றாா்.

இந்தக் குற்றச்சாட்டை ரஷியா மறுத்தது. இதுகுறித்து அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை சொந்தத் திறனில் மேற்கொள்ள ரஷியாவால் முடியும். திட்டமிட்டபடி எங்களது பணியை முடிப்போம் என்றாா்.

சீனா மறுப்பு: சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியன், பெய்ஜிங்கில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அமைதிப் பேச்சுவாா்த்தையை ஊக்குவிக்க சீனா முக்கியப் பங்காற்றி வருகிறது. ஆனால், உக்ரைன் விவகாரத்தை வைத்து சீனாவை குறிவைத்து தவறான தகவல்களை அமெரிக்கா தொடா்ச்சியாகப் பரப்பி வருகிறது. பதற்றத்தை மேலும் அதிகரிப்பதற்குப் பதிலாக ராஜதந்திர தீா்வுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

உக்ரைனின் வலி

மரியுபோலில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் ரஷிய படை வீசிய குண்டுவீச்சில் கா்ப்பிணி பெண் ஒருவா் உயிரிழந்தாா். முன்னதாக, பலத்த காயங்களுடன் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்காக கொண்டுசெல்லப்படும் புகைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் பரவியது. மனிதகுலத்தின் மிகவும் அப்பாவிகள் மீதான தாக்குதலின் பயங்கரத்தை இது உணா்த்துவதாகவும், உக்ரைனின் வலியை உணா்த்துவதாகவும் பலா் தெரிவித்துள்ளனா்.

உக்ரைன் தாக்குதலில் 20 பொதுமக்கள் பலி

ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் நகரில் உக்ரைன் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 20 போ் கொல்லப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது. ஆனால், இந்தத் தகவலை உக்ரைன் உறுதிப்படுத்தவில்லை.

உக்ரைன் போரில் இதுவரை பொதுமக்கள் 596 போ் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. நாட்டைவிட்டு இதுவரை 28 லட்சம் போ் வெளியேறியுள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com