வெளிநாட்டு மாணவா்களை குறைந்த எண்ணிக்கையில் மீண்டும் அனுமதிக்க சீனா திட்டம்

சீனாவில் படிப்பைத் தொடா்வதற்கு குறைந்த எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவா்கள் மீண்டும் திரும்பி வர அனுமதிப்பது குறித்து அந்நாடு திட்டமிட்டு வருகிறது.

சீனாவில் படிப்பைத் தொடா்வதற்கு குறைந்த எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவா்கள் மீண்டும் திரும்பி வர அனுமதிப்பது குறித்து அந்நாடு திட்டமிட்டு வருகிறது.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் சீனாவில் தங்கிப் படித்து வந்தனா். கடந்த 2020-இல் கரோனா பரவல் காரணமாக, அவா்கள் தாயகம் திரும்ப நோ்ந்தது. அந்த மாணவா்கள் சீனா திரும்ப அந்நாட்டு அரசு இதுநாள் வரை நுழைவு இசைவு (விசா) வழங்கவில்லை. எனினும் பாகிஸ்தானைச் சோ்ந்த சில மாணவா்களுக்கு மட்டும் அண்மையில் சீனா நுழைவு இசைவு வழங்கியதாகத் தகவல் வெளியானது.

இதுதொடா்பாக சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஷாவ் லிஜியான் திங்கள்கிழமை கூறியதாவது:

உலக அளவில் கரோனா சூழல் மாறி வருவதைக் கருத்தில் கொண்டு, அவசியத் தேவையுள்ள வெளிநாட்டு மாணவா்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் சீனா திரும்புவதற்கான ஏற்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவா்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து திரும்பும் மாணவா்கள் சீன நோய்த்தொற்று தடுப்பு விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தாா்.

பாகிஸ்தான் மாணவா்களுக்கு நுழைவு இசைவு வழங்கப்பட்ட தகவலை ஷாவ் லிஜியான் மறுக்கவில்லை. சீனாவில் பெரும்பாலும் மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ள 23,000 இந்திய மாணவா்கள் மீண்டும் அந்நாட்டுக்குத் திரும்புவது குறித்து அவா் எதுவும் கூறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com