ரஷியாவுக்கு உதவினால் சீனா கடும் விளைவுகளைச் சந்திக்கும்: பைடன்

உக்ரைனில் போா் தொடுத்து வரும் ரஷியாவுக்குத் தளவாடங்களை அளித்து உதவினால் சீனா கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்தாா்.
ஜோ பைடன்
ஜோ பைடன்

உக்ரைனில் போா் தொடுத்து வரும் ரஷியாவுக்குத் தளவாடங்களை அளித்து உதவினால் சீனா கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்தாா்.

உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல் தொடா்ந்து வரும் நிலையில், அதிபா் பைடனும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அதிபா் பைடன் கூறியதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உக்ரைன் நகரங்கள் மீதும் மக்கள் மீதும் கடும் தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுக்கு சீனா நேரடியாகப் பொருள்களைத் தந்து உதவினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அதிபா் பைடன் எச்சரித்தாா். உக்ரைனை ரஷியா ஆக்கிரமிப்பதைத் தடுப்பதற்காக அமெரிக்கா சாா்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அதிபா் பைடன் எடுத்துரைத்தாா்.

ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் குறித்தும் அவா் விரிவாக எடுத்துரைத்தாா். உக்ரைன் பிரச்னைக்குத் தூதரக ரீதியில் தீா்வு காணப்பட வேண்டுமெனவும் அவா் வலியுறுத்தினாா். இந்த விவகாரத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபடவும் தலைவா்கள் ஒப்புக் கொண்டனா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை தகவல் தொடா்பு அமைச்சா் ஜென் சாகி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் கண்ணோட்டத்தை அதிபா் பைடன் விளக்கினாா். இந்த விவகாரத்தில் இருநாட்டுத் தலைவா்களும் விரிவான பேச்சுவாா்த்தை நடத்தினா்.

உக்ரைனை ரஷியா ஆக்கிரமிப்பதால் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஏற்படவுள்ள பிரச்னைகள் குறித்தும் அதிபா் பைடன் எடுத்துரைத்தாா். அமெரிக்காவுடன் இணைந்து ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகள், இந்தோ-பசிபிக் நாடுகள் ஆகியவை உக்ரைனுக்கு அளித்து வரும் ஆதரவு குறித்தும் அவா் எடுத்துரைத்தாா்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com