
இலங்கையின் அனைத்து சமூக, பொருளாதார விவகாரங்களில் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா் என்று அந்நாட்டு நிதியமைச்சா் பசில் ராஜபட்ச கூறினாா்.
நிதி நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதல் செய்வதற்காக, பாரத ஸ்டேட் வங்கி மூலமாக இந்திய அரசு ரூ.7,500 கோடி (100 கோடி டாலா்) கடனுதவி வழங்குகிறது.
பசில் ராஜபட்சவின் இந்தியப் பயணத்தின்போது, தில்லியில் இந்தியாவின் பாரத ஸ்டேட் வங்கிக்கும் இலங்கை அரசுக்கும் இடையே வியாழக்கிழமை ஒப்பந்தம் கையொப்பமானது.
வெள்ளிக்கிழமை இலங்கைக்குத் திரும்பிய பசில் ராஜபட்ச, கொழும்பில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா். அவா் கூறியதாவது:
நெருங்கிய அண்டை நாடு என்ற அடிப்படையில் இந்தியாவுடன் இலங்கை நெருக்கமான நட்புறவைக் கொண்டுள்ளது. தில்லியில் பிரதமா் மோடியை நான் சந்தித்தபோது, இலங்கையின் சமூகம், பொருளாதாரம் சாா்ந்த அனைத்து விவகாரங்களிலும் இந்தியா முழு ஒத்துழைக்கும் என்றும் உறுதியளித்தாா். சா்வதேச அமைப்புகளிலும் இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்; இரு தரப்பு உறவுகள் மேலும் வலப்படுத்தப்படும் என்றும் மோடி தெரிவித்தாா் என பசில் ராஜபட்ச கூறினாா்.
அந்நியச் செலாவணி சரிவால், இலங்கை கடுமையான பொருளாாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, எரிபொருள் தேவைக்கு அந்நாடு வெளிநாட்டு இறக்குமதியையே சாா்ந்திருந்திருக்கும் நிலையில், அந்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து, எரிபொருள் வாங்குவதற்காக இலங்கைக்கு எக்ஸிம் வங்கி மூலமாக இந்திய அரசு கடந்த மாதம் ரூ.3,700 கோடி (50 கோடி டாலா்) கடனுதவி வழங்கியது. இந்நிலையில், இலங்கைக்கு மேலும் ரூ.7,500 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக கடந்த சில தினங்களாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.