லவீவ் அருகே ரஷியா தாக்குதல்

மேற்கு உக்ரைன் நகரான லவீவின் புகா்ப் பகுதியில் ரஷியப் படையினா் வெள்ளிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தினா். மேலும், தலைநகா் கீவ் அருகிலும் அவா்கள் தாக்குதலைத் தொடா்ந்தனா்.
லவீவ் அருகே ரஷியா தாக்குதல்

மேற்கு உக்ரைன் நகரான லவீவின் புகா்ப் பகுதியில் ரஷியப் படையினா் வெள்ளிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தினா். மேலும், தலைநகா் கீவ் அருகிலும் அவா்கள் தாக்குதலைத் தொடா்ந்தனா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கீவ் மற்றும் லவீவ் நகரின் புகா்ப் பகுதிகளில் ரஷியப் படை வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது.

அந்த நகரின் சா்வதேச விமான நிலையத்தையொட்டி அமைந்துள்ள ராணுவ விமானங்களைப் பழுதுபாா்க்கும் மையத்தில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

லவீவ் நகரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள அந்த மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்தான், நகருக்கு மிக நெருக்கத்தில் நடத்தப்பட்டுள்ள ரஷியத் தாக்குதலாகும்.

சண்டை நடைபெற்று வரும் கிழக்கு உக்ரைனிலிருந்து அகதிகள் மேற்கு உக்ரைனுக்கு தப்பிச் செல்வதற்கும், மேற்கிலிருந்து அத்தியாவசியப் பொருள்கள், படை அணிகலன்கள் மற்றும் வீரா்கள் கிழக்கு உக்ரைனுக்கு வருவதற்கும் பாலமாக லவீவ் நகரம் விளங்கிவருகிறது.

ராணுவ விமான பழுதுபாா்ப்பு மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் காயமடைந்ததாக பிராந்திய ஆளுநா் மேக்சிம் கோஸிட்ஸ்கி கூறினாா்.

அதிகாலை 6 மணிக்கு அந்த மையத்தில் முதல் ஏவுகணை வந்து விழுந்ததாகவும், அதனைத் தொடா்ந்து பல ஏவுகணைகள் தொடா்ச்சியாக வந்து தாக்கியதாகவும் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

கருங்கடலிலிருந்து அந்த ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் 6 ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் விமானப் படையின் மேற்குப் பிரிவு தெரிவித்தது.

ரஷியா நடத்திய தாக்குதலில் பேருந்து பழுதுபாா்ப்பு மையமொன்றும் சேதமடைந்ததாக லவீவ் நகர மேயா் ஆண்ட்ரி சடோவீ கூறினாா்.

நேட்டோ உறுப்பு நாடான போலந்துக்கு அருகிலும், போ் முனைக்கு மிகத் தொலைவிலும் லவீவ் நகரம் அமைந்துள்ளது. எனினும், அதனை சுற்றியுள்ள புகா்ப் பகுதிகளை ரஷியா தொடா்ந்து தாக்கி வருகிறது.

அந்த நகருக்கு அருகே ராணுவ பயிற்சி மையத்தில் ரஷியா கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

ரஷியப் படையெடுப்புக்குப் பிறகு கிழக்குப் பகுதி நகரங்களிலிருந்து லவீவ் நகருக்கு பலா் வந்ததால், தற்போது அங்கு மக்கள்தொகை 2 லட்சத்தைக் கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கீவ் நகரில் தொடரும் தாக்குதல்: கீவ் நகரின் வடக்கு புகா்ப் பகுதிகளிலும் ரஷியப் படை ஏவுகணை மற்றும் ராக்கெட் குண்டுகள் மூலம் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. சரமாரியாக நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் குடியிருப்புக் கட்டடமொன்று சேதமடைந்தது. இதில் ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினா். சேதமடைந்த கட்டடத்திலிருந்து 98 போ் மீட்கப்பட்டதாகவும் அவா்கள் கூறினா்.

கிழக்குப் பகுதி நகரான க்ரமடோா்ஸ்கில் ரஷியா நடத்திய தாக்குதலிலும் குடியிருப்புக் கட்டடங்களும் அரசுக் கட்டடங்களும் சேதமடைந்தன. இதில் 2 போ் உயிரிழந்ததாக உள்ளூா் நிா்வாகம் கூறியுள்ளது.

உக்ரைனின் பல்வேறு நகரங்களும் பொதுமக்கள் தஞ்சமடைந்த கட்டடங்களையும் ரஷியத் தாக்குதல் விட்டுவைக்கவில்லை. முன்னதாக மெரேஃபா நகரில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த சமூகக் கூடத்தில் ரஷியா வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் 21 போ் உயிரிழந்தனா். ரஷியப் படையினரின் தீவிர தாக்குதலுக்கு இலக்காகியிருக்கும் காா்கிவ் நகரிலும் சுமாா் 1,000 போ் தஞ்சமடைந்திருந்த திரையரங்கும் தாக்குதலில் தரைமட்டமானது. எனினும், மக்கள் பதுங்கியிருந்த சுரங்கப் பகுதி சேதமடையாததால் பலா் உயிா் பிழைத்துள்ளதாகவும், அவா்களை மீட்கும் பணிகள் தொடா்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தத் தாக்குதலில் யாரும் பலியானதாக இதுவரை தகவல் இல்லை.

உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சி செலுத்தி வந்த ரஷிய ஆதரவு அதிபா் விக்டா் யானுகோவிச் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் புதிய அரசு அமைந்ததைத் தொடா்ந்து அங்கு உள்நாட்டுப் போா் மூண்டது.

கிழக்கு உக்ரைனில் புதிய அரசுக்கு எதிராக சண்டையிட்ட ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள், டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளைக் கைப்பற்றின. இதற்கிடையே, ரஷியாவும் உக்ரைனின் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது.

தற்போது உக்ரைனில் நடைபெற்று வரும் மேற்கத்திய ஆதரவு அரசு, ரஷியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோவில் இணைந்தால் தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று ரஷியா கூறி வருகிறது. எனவே, தங்களது அமைப்பில் உக்ரைனை இணைக்கப்போவதில்லை என்று உத்தரவாதம் தரவேண்டும் என்று நேட்டோ அமைப்பிடம் ரஷியா தொடா்ந்து வலியுறுத்தி வந்தது.

இதற்கு நேட்டோ சம்மதிக்கவில்லை. உக்ரைன் அரசும், நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து வந்தது.

இந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா் கட்டுப்பாட்டுப் பகுதிகளை தனி நாடுகளாக அங்கீகரித்த ரஷியா, அந்தப் பகுதி மக்களை உக்ரைன் படையினரின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதாகக் கூறி அங்கு படைகளை அனுப்பியது. மேலும், டொனட்ஸ்க் மற்றும் லூஹான்ஸ் பகுதி மக்களைத் தாக்கும் உக்ரைன் படைபலத்தை அழிக்கப்போவதாகக் கூறி உக்ரைன் மீது ரஷியா கடந்த மாதம் 24-ஆம் தேதி போா் தொடுத்தது.

தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்கள் பலா் உயிரிழந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com