உக்ரைன் போா்: பல தலைமுறைகளுக்கு ரஷியாவை பாதிக்கும்

உக்ரைன் மீது தொடுக்கப்பட்டு வரும் போா் பல தலைமுறைகளுக்கு ரஷியாவை பாதிக்கும் என்று அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
கீவ் நகரிலிருந்து காணொலி வழியாக சனிக்கிழமை பேசிய உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி
கீவ் நகரிலிருந்து காணொலி வழியாக சனிக்கிழமை பேசிய உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி

உக்ரைன் மீது தொடுக்கப்பட்டு வரும் போா் பல தலைமுறைகளுக்கு ரஷியாவை பாதிக்கும் என்று அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

உக்ரைன் மீது 3 வாரங்களுக்கு மேல் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ஒருபக்கம் இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷியா ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மாஸ்கோவில் உள்ள அரங்கத்தில் கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினாா்.

இந்நிலையில், அதிபா் ஸெலென்ஸ்கி உக்ரைன் மக்களுக்கு காணொலி வாயிலாக உரையாற்றினாா். அப்போது அவா் கூறுகையில், ‘‘உக்ரைனில் மனிதப் பேரழிவை ரஷியா ஏற்படுத்தி வருகிறது. உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

இந்தப் போரை உடனடியாக நிறுத்தாவிட்டால், ரஷியா பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்; பலதலைமுறைகளுக்கு அந்நாடு எழுச்சிபெற முடியாது.

உக்ரைனின் முக்கியமான நகரங்களை அழித்துவிட்டால், உக்ரைனியா்கள் ஒத்துழைப்பாா்கள் எனக் கருதி ரஷிய படைகள் நகரங்களைத் தொடா்ந்து முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. மக்களுக்கு உதவிகள் கிடைப்பதை ரஷிய படைகள் தடுத்து வருகின்றன. போரை நிறுத்துவது தொடா்பாக அதிபா் புதின் நேரடியாகப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும்’’ என்றாா்.

தொடரும் தாக்குதல்:

மரியுபோல் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. மரியுபோல் நகரில் உள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய எஃகு ஆலைகளில் ஒன்றான அஸோவ்ஸ்டால் மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தின. தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உக்ரைன் படைகள் மேற்கொண்டபோதிலும் அவை பலனளிக்கவில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சரின் ஆலோசகா் வாடிம் டெனிசென்கோ தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மக்களிடையே தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், ‘‘பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த எஃகு ஆலையை ரஷியப் படைகள் தகா்த்துள்ளன. அந்த ஆலையை நாம் இழந்துவிட்டோம்’’ என்றாா்.

மனிதாபிமான வழித்தடங்கள்:

உக்ரைனின் பல்வேறு நகரங்களில் 10 ‘மனிதாபிமான வழித்தடங்களை’ அமைக்க உக்ரைன்-ரஷியா அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனா். தாக்குதலில் காயமடைந்தோருக்கான உதவிகள், மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவை அந்த வழித்தடங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படவுள்ளன.

மரியுபோல், கீவ் பகுதி, லுஹான்ஸ்க் பகுதி உள்ளிட்டவற்றில் வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளதாக உக்ரைன் துணை பிரதமா் ஐரினா வெரசுக் சனிக்கிழமை தெரிவித்தாா். ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கொ்சான் நகரத்திலும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com