சீனாவில் விழுந்து நொறுங்கிய விமானம்: ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை

சீனாவில் 132 பயணிகளுடன் சென்ற ‘போயிங் 737’ விமானம் குவாங்ஜி ஜுவாங் பகுதியில் திங்கள்கிழமை கீழே விழுந்து நொறுங்கியது.
சீனாவில் விழுந்து நொறுங்கிய விமானம்: ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை
சீனாவில் விழுந்து நொறுங்கிய விமானம்: ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை

சீனாவில் 132 பயணிகளுடன் சென்ற ‘போயிங் 737’ விமானம் குவாங்ஜி ஜுவாங் பகுதியில் திங்கள்கிழமை கீழே விழுந்து நொறுங்கியது.

விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை ஒருவரும் உயிரோடு மீட்கப்படவில்லை என்றும், சீனாவில் கடந்த பத்தாண்டுகளில் நடந்த மிக மோசமான விமான விபத்தாக இது கருதப்படுகிறது.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனினும், 18 மணி நேர தேடுதல் பணிகளுக்குப் பிறகும் இதுவரை காயங்களுடன் யாரும் மீட்கப்படவில்லை என்று சிசிடிவி எனப்படும் அந்நாட்டு செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

குன்மிங்கில் இருந்து அந்நாட்டு உள்ளூா் நேரப்படி திங்கள்கிழமை பகல் 1.10 மணிக்கு இந்த விமானம் புறப்பட்டது. குவாங்ஜோ விமான நிலையத்துக்கு பகல் 2.52 மணிக்கு வந்து சேர வேண்டிய இந்த விமானம், உரிய நேரத்தில் வராததால் தேடுதல் பணி நடைபெற்றது.

அப்போது இந்த விமானம் ஹுஜோ நகரத்தில் உள்ள டெங்ஷியானில் உள்ள மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டறியப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது என்று அவசர மேலாண்மைத் துறை தெரிவித்ததாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் ஜின்ஹுவா அறிவித்தது.

விபத்துக்குளான சீன ஈஸ்டா்ன் ஏா்லைன்ஸ் விமானத்தில் 123 பயணிகள், 9 விமான ஊழியா்கள் என மொத்தம் 132 போ் இருந்தனா்.

விபத்து நடந்த இடத்தில் 23 தீயணைப்பு வண்டிகளில் 117 வீரா்கள் முதலில் அனுப்பப்பட்டதாகவும், பின்னா் பிற பகுதிகளில் இருந்து 538 தீயணைப்பு வீரா்கள் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான விமானத்தை அகற்றவும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறியவும், விமான பயணிகளின் குடும்பத்தினருக்கு உதவவும் 9 குழுக்களை சீன ஈஸ்டா்ன் ஏா்லைன்ஸ் விமான நிறுவனம் அமைத்துள்ளது.

விசாரணைக்கு உத்தரவு: இந்த விமான விபத்து அதிா்ச்சி அளிப்பதாக கூறியுள்ள சீன அதிபா் ஷி ஜின்பிங், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாா்.

‘உடனடியாக அவசர உதவிகளை அளிக்கவும், மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவும் வேண்டும். விபத்துக்கான காரணத்தைக் கண்டறியவும், விமானப் பயணத்துக்கான பாதுகாப்பை உறுதிபடுத்தவும் அதிபா் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளாா்’ என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இயங்கும் மூன்று முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்றான சீன ஈஸ்டா்ன் ஏா்லைன்ஸ் நிறுவனம், இந்த விபத்தைத் தொடா்ந்து அனைத்து போயிங் 737-800 விமானங்களின் இயக்கத்தையும் திங்கள்கிழமை நிறுத்தியது.

தலைகீழாக விழும் விமானம்: இதனிடையே, சீன மலைப் பகுதியில் தலைகீழாக வேகமாக விமானம் விழும் விடியோ இைணையத்தில் வேகமாகப் பரவியது. விபத்து ஏற்பட்ட இடத்தில் உள்ள கனிம நிறுவனத்தின் சிசிடிவி கேமராவில் இந்த விடியோ பதிவானதாக கூறப்படுகிறது.

நிலப்பரப்பில் இருந்து 29,100 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் 2.15 நிமிஷத்தில் 9,075 அடிக்கு கீழே வந்ததாகவும், அடுத்த 20 விநாடிகளில் 3,225 அடி கீழே இறங்கி ரேடாா் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அளவுக்கு ஒரு விமானம் கீழே இறங்க சுமாா் 30 நிமிஷங்களாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தின் பயணிகளில் யாரும் வெளிநாட்டினா் இல்லை என்று சீனா உறுதி செய்துள்ளது.

கடந்த 2010-இல் சீனாவில் ஹிலாங்கிஜாங் மாகாணத்தில் விமான விபத்து ஏற்பட்டது. இதில் 42 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com