சீன விமான விபத்து: தேடுதல் பணியில் கிடைத்த முக்கிய பொருள்கள்

ஒரு கருப்புப் பெட்டி புதன்கிழமை கண்டறியப்பட்ட நிலையில், இன்று முதல் முறையாக விமான எஞ்சினின் ஒரு பாகமும், சீன ஈஸ்டர்ன் முத்திரையுடன் வெள்ளை இறக்கைப் பகுதியும் கண்டறியப்பட்டுள்ளது.
சீன விமான விபத்து: தேடுதல் பணியில் கிடைத்த முக்கிய பொருள்கள்
சீன விமான விபத்து: தேடுதல் பணியில் கிடைத்த முக்கிய பொருள்கள்

சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரு கருப்புப் பெட்டிகளில் ஒரு கருப்புப் பெட்டி புதன்கிழமை கண்டறியப்பட்ட நிலையில், இன்று முதல் முறையாக விமான எஞ்சினின் ஒரு பாகமும், சீன ஈஸ்டர்ன் முத்திரையுடன் வெள்ளை இறக்கைப் பகுதியும் கண்டறியப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கானவர்கள் ரப்பர் பூட்ஸ்களை அணிந்து கொண்டு, அந்த சேறும் சகதியும் நிறைந்த வனப்பகுதிக்குள் தொடர்ந்து மூன்று நாள்களாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேற்று ஒரு கருப்புப் பெட்டி கண்டறியப்பட்ட நிலையில், மற்றொரு கருப்புப் பெட்டியை தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

விமான விபத்து நடந்த பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பள்ளமான பகுதிகளிலிருந்து மழை நீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியும் நடந்து வருகிறது.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுன்னான் தலைநகர் குன்மிங்கிலிருந்து குவாங்ஜோ நகரை நோக்கி கடந்த திங்கள்கிழமை சென்ற போயிங் 737 ரக விமானம், வூஜோ நகரத்துக்கு உள்பட்ட டெங்ஷியான் மலைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 123 பயணிகளும், 9 ஊழியர்களும் பயணித்தனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் இரு நாள்களாக மீட்புப் பணி நடைபெற்ற நிலையில், பயணிகளின் பணப் பைகள் (பர்ஸ்), ஏடிஎம் அட்டைகள், அலுவலக அடையாள அட்டைகளை மட்டுமே மீட்க முடிந்ததாகவும், பயணிகளில் ஒருவர்கூட உயிருடன் மீட்கப்படவில்லை என்றும் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விபத்து நடந்த பகுதியிலிருந்து விமானத்தின் ஒரு கருப்புப் பெட்டி கண்டறியப்பட்டதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் புதன்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்திருந்ததாவது: விபத்துக்குள்ளான விமானத்தில் இரு கருப்புப் பெட்டிகள் இருந்தன. ஒன்று விமானியின் அறையிலும், மற்றொன்று விமானத்தின் பின்பகுதியிலும் வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஒரு கருப்புப் பெட்டி கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் விபத்துக்கு முன்னர் விமானத்தில் பதிவான உரையாடல்கள் குறித்து தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

கருப்புப் பெட்டிகள் எனக் கூறப்பட்டாலும் பொதுவாக அவை பிரகாசமான ஆரஞ்சு-சிவப்பு நிறத்தில் இருக்கும். விபத்து நடந்தால் அவற்றை எளிதாக கண்டறிவதற்காக அந்த நிறத்தில் கருப்புப் பெட்டிகள் அமைக்கப்படுகின்றன. மேலும், விபத்தால் சேதமடையாத வகையிலும், அதிக வெப்பநிலையிலும், தண்ணீரில் மூழ்கினாலும் தாக்குப்பிடிக்கும் வகையிலும் இருக்கும். அவற்றின் பேட்டரி சுமார் 30 நாள்கள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com