சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்தனர்: அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சீனாவில் கடந்த வாரம் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், 120 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சீன விமான விபத்து
சீன விமான விபத்து

சீனாவில் கடந்த வாரம் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், 120 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுன்னான் தலைநகா் குன்மிங்கிலிருந்து தொழில் மையமாக விளங்கும் குவாங்ஜோ நோக்கிச் சென்ற போயிங் 737 ரக விமானம் 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது ஹுஜோ நகரத்துக்கு உள்பட்ட டெங்ஷியான் மலைப் பகுதியில் திங்கள்கிழமை (மார்ச் 21) உள்ளூா் நேரப்படி மதியம் 2.20 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 123 பயணிகளும், 9 ஊழியா்களும் பயணித்தனா்.

இதைத் தொடா்ந்து, விபத்து நடைபெற்ற இடத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மீட்புப் பணி நடைபெற்றது. சம்பவ இடம் மூன்று பக்கங்களும் மலையால் சூழப்பட்டுள்ளதால் அங்கு நடந்து அல்லது இருசக்கர வாகனத்தில்தான் மீட்புப் படையினா் செல்ல முடிந்தது.

விமானம் விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து சேறுபடிந்த பணப் பைகள் (பா்ஸ்), ஏடிஎம் அட்டைகள், பயணிகளின் அலுவலக அடையாள அட்டைகளை மட்டுமே மீட்க முடிந்ததாகவும், பயணிகளில் ஒருவா்கூட உயிருடன் மீட்கப்படவில்லை என்றும் அதிகாரி ஒருவா் கூறினார். 

விமான தரவுகளையும் விமானிகளின் உரையாடலையும் பதிவுசெய்யும் கருப்புப் பெட்டியை மீட்பதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் பணியில் ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், கடந்த புதன்கிழமை விமானத்தின் முதல் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இரண்டாவது கறுப்புப் பெட்டியும் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் இரண்டாவது கறுப்புப் பெட்டி மீட்கப்படவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், சீனாவில் கடந்த வாரம் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், டிஎன்ஏ பரிசோதனை மூலம் 120 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

மேலும் விமானத்தின் முதல் கறுப்புப் பெட்டி ஏற்கனவே மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது கறுப்புப் பெட்டியை மீட்டெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com